ஆய்வு தகவல் : கொரோனா வைரஸ் தொற்றும் ஒருவரின் அனைத்து உடல் பாகங்களும் பாதிப்படையும்
கொரோனா வைரஸ் ஒருவரை தாக்கினால் அவரது நுரையீரலும், இதயமும் மிக கடுமையாக பாதிக்கப்படும் என்று முதலில் ஆய்வு தகவல்கள் தெரிவித்தன. பிறகு சிறுநீரகத்தையும் இந்த வைரஸ் மிக வேகமாக தாக்கும் என்று கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் குணம் அடைந்தாலும் அவர்கள் எதிர்காலத்தில் எத்தகைய சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று உலகம் முழுவதும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஒரு ஆய்வில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரணுக்களில் பாதிப்பு ஏற்பட்டு ஆண்மைத் தன்மை பறிபோகும் என்ற ‘பகீர்’ தகவல் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா வைரசின் பிந்தைய பின் விளைவுகள் பற்றிய மிகப் பெரிய ஆய்வை இந்திய விஞ்ஞானிகள் நடத்தினார்கள். ஐதராபாத், நாக்பூர், பெங்களூர், பாட்னா, சண்டிகரில் உள்ள விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து இந்த ஆய்வை நடத்தினார்கள்.
அதில் கொரோனா பாதித்தால், அவர்களது உடல் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மிக சிறிய உடல் உறுப்புகளையும் வைரஸ் பாதிக்கும் என்று இந்திய விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இருதயம், நுரையீரல், கல்லீரல் ஆகியவற்றில் மட்டுமின்றி ரத்த நாளங்களையும் கொஞ்சம், கொஞ்சமாக பாதிக்கும் என்கிறார்கள். இத்தகைய பாதிப்புகளில் இருந்து தப்பிக்க தொடர்ந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்தான உணவு வகைகளை சாப்பிட வேண்டும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.