ரஞ்சனை நாடாளுமன்றத்துக்கு அனுமதிக்குமாறு கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் போராட்டம்.
ரஞ்சனை நாடாளுமன்றத்துக்கு அனுமதிக்குமாறு கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் போராட்டம்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட எம்.பி. ரஞ்சன் ராமநாயக்கவை நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு கோரி, எதிர்க்கட்சியினர் இன்று சபையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வது தொடர்பாக, தெளிவான அறிவுறுத்தல்களை சபாநாயகர் வெளியிட வேண்டும் என்று எதிரணியினர் கோரிக்கை விடுத்தனர்.
எதிரணியினர் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பிக்கும்போது, பிரதி சபாநாயகரே சபையில் இருந்தார். ஆர்ப்பாட்டத்துக்கு இடையேதான் சபாநாயகர் வருகை தந்தார்.
ரஞ்சன் ராமநாயக்கவை நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதற்கு சபாநாயகர் முறையாகப் பதிலளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதேநேரம், அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கின்றது எனவும், அவரை வெலிக்கடை சிறைச்சாலைக்கு இடம் மாற்றுமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.