மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மெழுகு சிலை திறந்து வைப்பு.

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மெழுகு சிலை அறிவுசார் பூங்காவையும், அருங்காட்சியகத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளான இன்று திறந்து வைத்தார்.
ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி வளாகத்தில் உள்ளது.
50,422 சதுரடி பரப்பளவில் ரூ.80 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த நினைவிடம் 15 மீற்றர் உயரம், 30.5 மீற்றர் நீளம், 43 மீற்றர் அகலம் கொண்டதாக உள்ளது.
இந்த நினைவிட வளாகத்தில் அறிவுசார் பூங்கா ஒரு புறமும், மற்றொரு புறம் டிஜிட்டல் அருங்காட்சியகமும் ரூ.12 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.
அதில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, அவர் செய்த சாதனைகள், மக்களுக்கு செய்த சேவைகள், வீடியோ மற்றும் ஓடியோ காட்சி பிரிவு, ஜெயலலிதாவின் உரைகள், சிறுகதைகள், புகைப்படங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவுசார் பூங்காவில் ஜெயலலிதாவின் 6 அடி உயர மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவிடம் பாடசாலை மாணவி ஒருவர் லப்-ரொப் பெறுவது போன்று மெழுகு சிலை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர அருங்காட்சியகத்தில் 8 அடி உயர மெழுகு சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.