மட்டக்களப்பில் மாணவனுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த ஆசிரியைக்கு இடமாற்றம்
மட்டக்களப்பிலுள்ள பாடசாலையொன்றில் கடமையாற்றும் ஆசிரியை ஒருவர், அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர் ஒருவருக்கும் அவரின் தாயாருக்கும் தொலைபேசி ஊடாக மரண அச்சுறுத்தல் விடுத்திருந்ததாகக் கூறப்படும் நிலையில், குறித்த ஆசிரியைக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் பணிபுரியும் பிரசாந்தி சுகுணன் எனும் ஆசிரியை, கடந்த சில நாட்களுக்கு முன்னர், அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரின் தாயாருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, அவருக்கும் அவரின் மகனுக்கும் மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சர்ச்சைக்குரிய ஆசிரியையினுடையது எனக் கூறப்படும் தொலைபேசி குரல் பதிவு, ஊடகங்களில் வெளிவந்த நிலையிலேயே, அவருக்கு இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த ஆசிரியைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாடு ஒன்றின் நிமித்தம் தற்காலிக இடமாற்றமொன்று வழங்கப்படுவதாக, கிழக்கு மாகாாண மேலதிக கல்விப் பணிப்பாளர் ஏ. விஜயானந்தமூர்த்தி ஒப்பமிட்டு கடிதமொன்று வழங்கப்பட்டுள்ளது.
இன்று 25ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் புனித மிக்கேல் கல்லூரியில் இருந்து மஹஜன கல்லூரிக்கு, இவர் தற்காலிகமான இடமாற்றப்பட்டுள்ளார்.
மரண அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும் மேற்படி ஆசிரியை பிரசாந்தி என்பவர், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கே. சுகுணனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.