கபசுர குடிநீர் குடிப்பதால் பயன் என்ன?- டாக்டர் விளக்கம்
கொரோனா வைரஸ் பரவுவதைவிட அது சார்ந்த வதந்திகள் தான் அதிவேகமாக பரவி வருகிறது. வெயில் அதிகமாக இருந்தால் கொரோனா வைரஸ் செத்துவிடும் என்றெல்லாம் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவுகிறது. தற்போது வீட்டில் இருக்கும் பொதுமக்கள் பொழுதுபோக்குக்காக செல்போன்களில் வலைத்தளத்தை தான் பார்த்து வருகிறார்கள்.
இதில் கொரோனா வைரஸ் தொடர்பாக வேகமாக பரவி வரும் தகவலில் எது உண்மை? எது பொய் என்று தெரியாமல் பொதுமக்கள் குழப்பம் அடைகின்றனர். எனவே மூலிகைகள் அடங்கிய கபசுர குடிநீரை குடிப்பதும் அதிகரித்து விட்டது. இந்த கபசுர குடிநீரை குடிப்பது நல்லதா? அதனால் என்ன பயன்? என்று தெரியாமலேயே பலர் குடித்து வருகிறார்கள்.
எனவே இந்த கபசுர குடிநீரை குடிப்பதால் ஏற்படும் பயன் குறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி முன்னாள் மருத்துவ இருப்பிட அதிகாரி டாக்டர் சவுந்திரவேல் கூறியதாவது:-
கபம் என்றால் சளி, சுரம் என்றால் காய்ச்சல், அதாவது சளி, காய்ச்சலை அகற்றுவதுதான் கபசுரம். ஆடாதோடா இலை, கற்பூரவல்லி, சுக்கு, மிளகு உள்பட 18 வகையான மூலிகை பொருட்களை கலந்து செய்ததுதான் கபசுர குடிநீர். இதில் நிலவேம்பு கசாயமும் சேர்க்கப்பட்டு உள்ளது.
பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் ஆகியவை வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது. இதனால் பலர் இந்த கசாயத்தை வாங்கி குடித்தனர். தற்போது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கபசுர குடிநீர் பல இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது. அரசு சார்பிலும் இந்த குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இது கொரோனா வைரசுக்கான மருந்து இல்லை. நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் குடிநீர்தான். கபசுர குடிநீரை குடிக்கும்போது, சளி இருந்தால் அதை எளிதாக அகற்றி விடும். அதுபோன்று நுரையீரலில் உள்ள அணுக்களின் அளவை அதிகரித்து எளிதாக சுவாசிக்கக்கூடிய பலனையும் கொடுக்கிறது.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகதான் இந்த கபசுர குடிநீரை அனைவரும் குடிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அதை பொதுமக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும். சில இடங்களில் இதை குடிநீராகவே வழங்குகிறார்கள். சில இடங்களில் பொடியாக கொடுக்கிறார்கள்.
ஒரு வீட்டில் 5 பேர் இருந்தால், 5 கிராம் கபசுர பொடியை எடுத்து பாத்திரத்தில் போட்டு 5 தம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். நீங்கள் ஊற்றிய தண்ணீர் பாதியாக குறையும் அளவுக்கு காய்ச்ச வேண்டும். பின்னர் ஒவ்வொருவரும் அரை தம்ளர் அளவுக்கு காலை, மாலை என 5 நாளுக்கு குடித்தால் சளி, காய்ச்சல் எதுவும் வராது.
காலையில் குடிக்கும்போது சாப்பிட்டுவிட்டு குடிக்கக்கூடாது. வெறும் வயிற்றில் குடித்தால்தான் உடலில் உள்ள சளி குறையும். எனவே இந்த நடைமுறையை பின்பற்றி கபசுர குடிநீரை குடித்தால் நல்லது. அதை பொதுமக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். இதில் நிலவேம்பு கசாயமும் சேர்ந்து இருப்பதால், உடலுக்கு நல்லது.