கல்முனை மாநகர சபை உறுப்பினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை.
கல்முனை மாநகர சபை உறுப்பினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை;
கொடுப்பனவையும் இழந்தார்.
கல்முனை மாநகர சபையில் இடைநிறுத்தம் செய்யப்பட்ட உறுப்பினர் ஒருவர், அதனை மீறி மாதாந்த சபை அமர்வுக்கு சமூகமளித்திருந்த போதிலும் ஒழுக்காற்று நடவடிக்கையின் பிரகாரம் அவருக்கு கையொப்பமிட சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு புதன்கிழமை (24) பிற்பகல் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றது.
இந்த அமர்வில் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த மாநகர சபையின் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் கே.செல்வராசாவும் கலந்து கொண்டிருந்தார். கடந்த 2021-01-27 ஆம் திகதியன்று இடம்பெற்ற ஜனவரி மாத அமர்வின்போது இவர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகத் தெரிவித்து, சபையிலிருந்து வெளியேறுமாறு இவரைப் பணித்த மாநகர முதல்வர், பெப்ரவரி மாத அமர்வில் கலந்து கொள்வதற்கும் தடை விதிப்பதாக அறிவித்திருந்தார். இதன்படி இந்த அமர்வுக்கான அழைப்புக்கடிதம் அவருக்கு அனுப்பப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில் இந்த அமர்வு ஆரம்பிப்பதற்கு முன்னரே உறுப்பினர் செல்வராசா சபா மண்டபத்திற்குள் பிரவேசித்து, தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார். எனினும் வரவுப் பதிவேட்டில் கையொப்பமிட அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. இதனால் அவர் சபையில் உரையாற்றவோ குறுக்கீடுகள் செய்யவோ முற்படாமல் இறுதிவரை அமைதியாக இருந்து விட்டுச் சென்றார்.
மாநகர சபையின் ஓர் உறுப்பினருக்கு மாதாந்த சபை அமர்வில் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்படுமாயின் அந்த மாதத்திற்கான கொடுப்பனவும் அவருக்கு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஒருவருக்கு மாதாந்த கொடுப்பனவாக 20 ஆயிரம் ரூபாவும் தொலைபேசி கட்டணத்திற்காக 05 ஆயிரம் ரூபாவுமாக மொத்தம் 25 ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.