முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க காலமானார்!
முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க இன்று காலமானார்!
முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் (டி.ஐ.ஜி.) அனுர சேனாநாயக்க இன்று காலமானார்.
இவர் சுகயீனம் காரணமாக நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பிற்பகல் உயிரிழந்துள்ளார் என்று அவரின் குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.
அனுர சேனாநாயக்க 1973 இல் இலங்கை பொலிஸ் பிரிவில் இணைந்தார். 8 ஆண்டுகளுக்குப் பின்னர் பொலிஸ் அத்தியட்சகர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். 1985ஆம் ஆண்டில், தலைமை அத்தியட்சகராக நியமிக்கப்பட்டார்.
2008ஆம் ஆண்டு முதல் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகப் பணியாற்றியதோடு 2011ஆம் ஆண்டு டிசம்பரில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராகப் பதவி உயர்வு பெற்றார்.
கடந்த மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் படுகொலை செய்யப்பட்டார் என்று கூறப்படும் இலங்கையின் தேசிய ரக்பி அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய வசீம் தாஜூஜுதீனின் வழக்கு தொடர்பான சாட்சியங்களை மூடிமறைத்த குற்றச்சாட்டில் அனுர சேனாநாயக்க 2016ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு சுமார் ஒரு வருடகால விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
பிரபலமான சில சிங்களப் பாடல்களையும் அவர் பாடியுள்ளார். அவர் பாடிய மாகே கிரில்லி சேயா யன்னே மா என்ற சிங்களப் பாடல் மிகவும் பிரபலமானது.