பிள்ளைகளைக் காட்டினால் மட்டுமே ஜனாதிபதியுடன் பேசுவதற்குத் தயார்.
பிள்ளைகளைக் காட்டினால் மட்டுமே
ஜனாதிபதியுடன் பேசுவதற்குத் தயார்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவிப்பு
“துண்டுப் பிரசுரம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அருகில் இருக்கும் நான்கு தமிழ்ச் சிறுமிகளையும் எங்களுக்குக் காட்டினால் மாத்திரமே ஜனாதிபதியுடன் பேசுவது தொடர்பாகச் சிந்திப்போம்.”
இவ்வாறு வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் தொடர்பில் பதிலளிக்கும் வகையிலே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:-
“கடந்த ஏழு தசாப்தங்களாக இலங்கை அரசுடன் பேசி ஏமாற்றமடைந்துள்ளோம். கடைசியாக 2017ஆம் ஆண்டில் கூட இலங்கை அரசுடன் அலரி மாளிகையில் சந்தித்தோம். அப்போதும் நாங்கள் ஏமாற்றப்பட்டோம்.
குறித்த நான்கு பிள்ளைகளையும் ஜனாதிபதி காட்டினால், எங்களுடன் பேசுவதற்கான அவரது அழைப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ளுவோம்.
அதன்மூலம் ஜனாதிபதி எங்களுக்கு உண்மையான முன்னேற்றத்தைக் காட்ட வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம்.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் செயலாளர் லீலாவதி, ஆட்சி மாற்றம் என்பது தமிழர்களுக்கு ஒரு தீர்வு அல்ல எனவும், காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இராணுவம் பொறுப்பல்ல எனவும் ஒரு ஊடகத்துக்குக் கருத்து தெரிவித்துள்ளார்.
அவரது கருத்து வருத்தமளிக்கின்றது. எமது குழந்தைகளை இராணுவம் அழைத்துச் சென்றதுதான் உண்மை.
எனவே, எமது பிள்ளைகளை அழைத்துச் சென்ற இராணுவம் விசாரிக்கப்பட வேண்டும்”என்றனர்.