ஜனாஸா நல்லடக்கம்:வர்த்தமானியைத் தாமதமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும்!

ஜனாஸா நல்லடக்கம்:வர்த்தமானியைத் தாமதமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும்!
அமெரிக்கத் தூதுவர் வலியுறுத்து
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பாக வெளியான வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதை அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் இந்த நடவடிக்கையை அமெரிக்கத் தூதுவர் வரவேற்றுள்ளதோடு, நீண்ட கால தாமதத்தின் பின்னரான தீர்மானம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு மேலும் துன்பம் கொடுப்பதைத் தவிர்த்து, அடக்கம் செய்யும் நடவடிக்கையைக் காலதாமதமின்றி செயற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.