நான்கு மணி நேரத்தில் மட்டும் 3,871 பேர் கைது! – பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட நான்கு மணி நேர சுற்றிவளைப்பின்போது 3 ஆயிரத்து 871 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும், 6 ஆயிரத்து 173 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய கடந்த 25ஆம் திகதி மாலை 6 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் 18 ஆயிரத்து 357 பொலிஸ் அதிகாரிகள் இந்தச் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 1,108 பேரும் துப்பாக்கிகளை வைத்திருந்த 16 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 1,430 பேரும், பல்வேறு குற்றங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த 562 பேரும் கைதாகியுள்ளனர்.
குறித்த சோதனை நடவடிக்கையின்போது குடிபோதையில் வாகனம் செலுத்திய 607 சாரதிகள் உள்ளடங்கலாக போக்குவரத்து விதிகளை மீறிமை தொடர்பில் 6 ஆயிரத்து 173 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” – என்றார்.