’13’ கோருவது இந்தியாவின் வழமையான புலம்பலே! – அமைச்சர் சரத் வீரசேகர கிண்டல்

“அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோருவது இந்தியாவின் வழமையான புலம்பல். 13ஆவது திருத்தச் சட்டத்தை புதிய அரசமைப்பின் ஊடாக இல்லாதொழிக்க வேண்டும் என்பதே அரசிலுள்ளவர்களில் பெரும்பான்மையானவர்களின் நிலைப்பாடு.”
– இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
‘அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாகத் தமிழர்களின் வேணவாக்களுக்குத் தீர்வுகாண தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இலங்கையைக் கோருகின்றோம். இலங்கை ஒருமைப்பாடு பேணப்பட வேண்டிய அதே நேரத்தில், இலங்கைத் தமிழர்களின் கௌரவம், சம உரிமை என்பவை அங்கீகரிக்கப்பட வேண்டுமென்பதே இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு’ என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை மீதான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த இந்தியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி இந்திரா மணி பாண்டே தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே அமைச்சர் சரத் வீரசேகர மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இது இந்தியாவின் வழமையான புலம்பல். 13ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடு. புதிய அரசமைப்பில் அதற்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்பது அரசிலுள்ளவர்களில் பெரும்பான்மையானவர்களின் நிலைப்பாடு.
புதிய அரசமைப்பின் ஊடாகவே தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு முன்வைக்கப்படும். இலங்கையின் அரசியல் தீர்வு விடயம் தொடர்பிலோ அல்லது நீதிப் பொறிமுறை தொடர்பிலோ வெளிநாடுகள் முடிவு எதனையும் எடுக்க முடியாது. இறைமையுள்ள எமது நாடே அது தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும். வெளியிலிருந்து இலங்கைக்கு எவரும் அழுத்தங்களை வழங்க முடியாது” – என்றார்.