உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குற்றவாளிகளை தூக்கிலிடுவோம் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவிப்பு
தமது அரசில் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையை முன்னெடுத்து அதன் மூலம் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை அண்மையில் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
இதையடுத்து பல்வேறு தரப்பினர் தமது கருத்துக்களை முன்வைத்துவரும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும் தமது நிலைப்பாட்டை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“குறித்த விசாரணை அறிக்கையின் ஒரு பகுதி எமக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை வைத்து எவ்வாறு உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்த முழு விபரங்களை அறிய முடியும்?
இவ்வாறு முழுமையற்ற விசாரணை அறிக்கையை எதற்காக நாட்டுக்கு அரசு சமர்ப்பிக்கின்றது?
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து எமது ஐக்கிய மக்கள் சக்தி அரசு முழுமையான விசாரணை முன்னெடுக்கும். தேவை ஏற்பட்டால், பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணையை முன்னெடுத்து குற்றம் இழைத்த அனைவரையும் தூக்கிலிட நடவடிக்கை எடுக்கப்படும்” – என்றார்.