தீப்பிடித்து எரிந்த பலசரக்கு விற்பனை நிலையம்!
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள பலசரக்கு விற்பனை நிலையம் இன்று (28) மாலை தீப்பிடித்து எரிந்தமையால் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியது.
குறித்த வர்த்தகநிலையம் இன்று மாலை திறக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாலை 5 மணியளவில் திடீர் என்று கடை தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதனை அவதானித்த அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் கிராமமக்கள் தீயை அணைப்பதற்கு கடுமையான முயற்சிகளை எடுத்தபோதும் வியாபாரநிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பொருட்களும் முற்றாக எரிந்து சாம்பலாகியது.
சுமார் 6 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்துள்ளதாக வியாபார நிலைய உரிமையாளரால் தெரிவிக்கப்படுகின்றது.
மின்சார ஒழுக்கு தீ விபத்திற்கு காரணமாக இருக்கும் என்று தெரிவிக்கப்படும் நிலையில் சம்பவம் தொடர்பாக வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.