வருகிறது மாகாண சபை தேர்தல் – ஜூன் மாதம் நடத்த ஜனாதிபதி விருப்பம்?
எதிர்வரும் ஜூன் மாதத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்த ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதன் ஒரு கட்டமாக ஆளும் கட்சியை சேர்ந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை ஜனாதிபதி சந்திக்க அழைப்பு விடுத்துள்ளதாகவும் இதன்பின்னர் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில வருடங்களுக்கு முன்னர் கலைக்கப்பட்ட மாகாண சபைகளுக்குகான தேர்தல் தொடர்ந்து பிற்போடப்பட்டு வருகிறது.
மாகாண சபைத் தேர்தலை வட்டார மற்றும் கலப்பு முறையில் நடத்த வேண்டும் என்ற யோசனை பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டு அது தோல்வியில் முடிந்துள்ளதால் மீண்டும் பழைய முறையில் தேர்தலை நடத்த அமைச்சரவை மற்றும் பாராளுமன்றில் அனுமதி பெற வேண்டும்.
அதுவரை தற்போது ஆளுநர்கள் மூலம் மாகாண சபைகள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்தியாவும் 13வது திருத்தச் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறை தொடர்ந்து அமுலில் இருக்க வேண்டும் என இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
எனினும் இலங்கையில் உள்ள ஒருசாரார் மகாண சபை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.