எத்தனை பிரேரணைகள் நிறைவேறினாலும் எங்களை எவரும் எதுவுமே செய்ய முடியாது! – மஹிந்த திட்டவட்டம்
“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக வெளிநாடுகள் எத்தனை பிரேரணைகளையும் கொண்டுவரலாம். அவை நிறைவேறினால் என்ன, நிறைவேறாவிட்டால் என்ன? அதனால் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எமது அரசின் வெளிநாட்டுக் கொள்கை நிலைப்பாட்டில் நாம் மாற்றம் எதையும் செய்யவேமாட்டோம்.”
– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46ஆவது அமர்வு நடைபெற்று வருகின்றது. இலங்கை தொடர்பான புதிய பிரேரணை விவகாரமும் சூடுபிடித்துள்ளது. வாக்குரிமையுள்ள 10 நாடுகள் மட்டும் இதுவரை இலங்கைக்கு ஆதரவாகக் கருத்து வெளியிட்டுள்ளன. இந்தநிலையில் இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக வெளிநாடுகள் எத்தனை பிரேரணைகளையும் கொண்டுவரலாம். அவை நிறைவேறினால் என்ன, நிறைவேறா விட்டால் என்ன எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இம்முறை பிரேரணையைத் தோற்கடிக்க வேண்டும் என்பதில் எமது நட்பு நாடுகள் உறுதியாக உள்ளன. இறுதியில் என்ன நடந்தாலும் எமது அரசின் வெளிநாட்டுக் கொள்கை நிலைப்பாட்டில் நாம் மாற்றம் எதையும் செய்யவே மாட்டோம். எமது புதிய அரசு பதவியேற்ற கையுடன் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கொள்கை விளக்க உரையில் அரசின் நிலைப்பாடுகளை தெளிவாக வெளியுலகத்துக்கு எடுத்துக் கூறியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சரும் தற்போது ஜெனிவாக் கூட்டத்தொடரில் இலங்கையின் நிலைப்பாட்டை எடுத்தியம்பியுள்ளார். எனவே, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் மிரட்டல்களுக்கும், அவருக்கு ஆதரவாக இருக்கும் சில நாடுகளின் கூட்டிணைவால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கும் நாம் அஞ்சவும் மாட்டோம்; அடிபணியவும் மாட்டோம்” – என்றார்.