உடல் அடக்கத்துக்கு அனுமதி: எந்தப் பிரச்சனையும் இல்லை – அஸ்கிரிய பீடம் அறிவிப்பு

“இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளித்துள்ளமையில் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. சுகாதாரத் தரப்பினரின் ஆலோசனைக்கமைய இந்த விவகாரத்தில் தீர்மானத்தை எடுக்குமாறு தான் நாம் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தினோம்.”
– இவ்வாறு அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்க மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்தார்.
சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்தத் தீர்மானம் தொடர்பில் அஸ்கிரிய பீடத்தின் நிலைப்பாட்டை ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களைத் தகனம் செய்வது தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டன.
இந்த விடயத்தில் சுகாதாரத் தரப்பினரின் ஆலோசனைக்கமைய தீர்மானங்களை எடுக்குமாறு நாம் ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தினோம்.
இது அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய விடயமல்ல. எனவே, அவர்களால் இந்த விடயத்தில் தீர்மானம் எடுக்க முடியாது.
எவ்வாறிருப்பினும் தற்போது இந்தப் பிரச்சினைக்கான தீர்வு கிடைத்துள்ளது. எனினும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனை வழிகாட்டல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாதவகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்” – என்றார்.