பஸில் – விமல் மோதல் உக்கிரம் கொழும்பு அரசியலில் பரபரப்பு

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசுக்கு ஆதரவு வழங்கும் சில பங்காளிக் கட்சிகளின் செயற்பாடுகள் தொடர்பில் மொட்டுக் கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
அரசுக்குள் இருந்துக்கொண்டு எதிரணியின் பணியை எவரும் முன்னெடுக்க முடியாது எனவும், அவ்வாறானவர்களை வெளியேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை எனவும் கடும் தொனியில் பஸில் விமர்சித்துள்ளார் என்று நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது என தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்சவுக்கும், அக்கட்சியின் புதுமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.
இதன்போதே தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான அமைச்சர் விமல் வீரவன்ச, புதிய ஹெல உறுமயவின் தலைவரான அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோரை இலக்கு வைத்து பஸில் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார் எனத் தெரியவருகின்றது.
பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதைத் தடுப்பதில் மேற்படி தலைவர்களே முன்னின்று செயற்பட்டனர். இவர்களுக்குச் சார்பான தேசியவாத அமைப்புகளின் பிரதிநிதிகள் பஸில் மீது விமர்சனக்கணைகளைத் தொடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.