டின்சின் தமிழ் மகா வித்தியாலய அதிபர் இனந்தெரியாதோர்களால் தாக்குதல்.
டின்சின் தமிழ் மகா வித்தியாலய அதிபரும், சமூக செயற்பாட்டாளருமான பொன்னுசாமி பிரபாகரன் மீது (பொன் பிரபா) கடந்தவார இறுதியில் இனந்தெரியாத குழுவொன்னு தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் தற்போது பொகவந்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.
இந்த சம்பவம் குறித்து பொகவந்தலாவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பின்தங்கிய நிலையில் உள்ள டின்சின் தமிழ் மகா வித்தியாலயத்தின் கல்வி நிலையை மேம்படுத்துவதற்கும், மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்கும் அவர் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்திருந்ததாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் ஒரு கட்டமாக, அதிபரின் முயற்சியால் பாடசாலையில் ஏற்படுத்தப்பட்ட சில அபிவிருத்தி முயற்சிகளுக்கும் சிலர் தீ வைத்துள்ளனர்.
2021ஆம் ஆண்டு முதலாம் தர மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகளுக்கென, இயற்கை பொருட்களை பயன்படுத்தி பெற்றோர்களால் உருவாக்கப்பட்ட, கூடாரம் எரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹட்டன் கல்வி வலயதிற்குட்பட்ட பொகவந்தாலா டின்சின் தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் பொன். பிரபாகரன் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆசிரியர் சமூகத்திற்கு எதிரான இவ்வாறான தாக்குதல் சம்பவங்களை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.