இரணைதீவு மக்கள் நாளை போராட்டம்!

இரணைதீவு மக்கள் நாளை போராட்டம்!
கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்தவர்களின் சடலங்களை கிளிநொச்சி – இரணைதீவில் அடக்கம் செய்யும் அரசின் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரணைதீவுப் பகுதி மக்கள் நாளை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர் என்று இரணைதீவு பங்குத்தந்தை மடுத்தீன் தெரிவித்தார்.
அதேவேளை, இந்தத் தீர்மானத்துக்கு எதிராக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“முஸ்லிம் சகோதரர்களால் பல்வேறு பட்ட பகுதிகள் முன்மொழியப்பட்ட போதிலும் அவற்றைத் தவிர்த்து போரால் இடம்பெயர்ந்து பல இன்னல்கள் மத்தியில் 2017ஆம் ஆண்டு பல கட்டப் போராட்டங்களின் பின்னர் குடியேறிய எமது இரணைதீவுப் பகுதியில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்ய மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் எமக்குக் கவலை அளிக்கின்றது.
அதேநேரத்தில் இரணைதீவு பகுதியானது நீரேந்துப் பிரதேசமாகக் காணப்படுவதால் கொரோனாத் தொற்றுள்ள சடலங்களைப் புதைப்பதால் நீரூடாகப் தொற்று பரவ வாய்ப்புள்ளது.
அண்மைக்காலமாகவே இரணைதீவு மக்கள் குடியேறி படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்ற நிலையில் அரசின் இந்த முடிவை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதிலை.
இரணைதீவில் தற்போது 165 குடும்பங்கள் அட்டைப் பண்ணைகளை அமைத்து வசித்து வருவதால் அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே, அரசின் தீர்மானத்துக்கு எதிராக மக்கள் அனைவரும் இணைந்து நாளை போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதுடன் யாழ். மனித உரிமை அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்யவுள்ளனர்” – என்றார்.