இரணைதீவில் ஜனாஸாக்கள் அடக்கம்: ஹக்கீம் கடும் எதிர்ப்பு!
இரணைதீவில் ஜனாஸாக்கள் அடக்கம்: ஹக்கீம் கடும் எதிர்ப்பு!
முஸ்லிம்களின் ஜனாஸாக்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் தீர்மானம் இனப்பாகுபாட்டை ஏற்படுத்தும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கருத்து வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் ஜனாஸாக்களை இரணைதீவில் அடக்கம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என அரசு நேற்று அறிவித்தது.
இந்தநிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ருவிட்டரில் பதிவிட்டுள்ள ரவூப் ஹக்கீம்,
“கிளிநொச்சி – இரணைதீவில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானம் இனப்பாகுபாட்டை ஏற்படுத்தும்.
இந்த விடயத்தில் ஏற்கனவே அவர்கள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியானது என நிரூபிப்பதற்கான முயற்சியாகவே இது அமைகின்றது” என்று பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த விடயம் குறித்து முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், “ஒரே கல்லில் இரண்டுக்கு மேற்பட்ட மாங்காய்களை அடிக்கவே, இரணைதீவைத் தெரிவு செய்துள்ளார்கள். தமிழ் பேசும் மக்கள் நிதானமாக இதை அணுக வேண்டும்” – என்று குறிப்பிட்டுள்ளார்.