பரீட்சை கடமையின்போது இடமாற்ற உத்தரவால் அதிபர்கள் திண்டாட்டம்.
பரீட்சை கடமையின்போது இடமாற்ற உத்தரவால் அதிபர்கள் திண்டாட்டம்;
மேன்முறையீட்டு காலத்தை நீடிக்குமாறு கல்வி நிர்வாக சங்க செயலாளர் முக்தார் வேண்டுகோள்
கிழக்கு மாகாண அதிபர்களின் இடமாற்றம் தொடர்பிலான மேன்முறையீட்டுக் காலம் நீடிக்கப்பட வேண்டும் என இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்வேண்டுகோளை வலியுறுத்தி, கிழக்கு மாகாண ஆளுநர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் அவசர கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.,
அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது;
கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் இலங்கை அதிபர் சேவை உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த இடமாற்றப் பட்டியல் அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.
இவ்விடமாற்றங்கள் இம்மாதம் 29ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வருமெனவும் இடமாற்றங்கள்
தொடர்பான மேன்முறையீடுகளை இம்மாதம் 15ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்கலாம்
எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிபர்கள் பலர் தற்போது நடைபெற்று வருகின்ற க.பொ.த.சாதாரண தர பரீட்சைக் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். இப்பரீட்சை எதிர்வரும் 12ஆம் திகதி முடிவடைகிறது. இதன் பின்னர் வருகின்ற நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறை தினங்களாகும். 15ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகின்றன.
இந்த நிலையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிபர்கள் 15ஆம் திகதிக்கு முன்னர்
மேன்முறையீடு செய்வதென்பது எந்த வகையிலும் சாத்தியமில்லாத விடயமாகும். இதனால் சம்மந்தப்பட்ட அதிபர்கள் பெரும் திண்டாட்டத்திற்குள்ளாகியுள்ளனர்.
எனவே, மாகாண கல்வி அமைச்சு இவ்விடமாற்றங்களை அமுல்படுத்தும் காலப்பகுதியை ஏப்ரல் 15ஆம் திகதி வரை பிற்படுத்தி, மேன்முறையீடு செய்ய வேண்டிய காலப்பகுதியை மார்ச் 31ஆம் திகதி வரை நீடிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
அதேவேளை, கல்முனை கல்வி வலய அதிபர்களுக்கு இவ்விடமாற்றத்தில் பெரும் அநீதி இழைக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். குறிப்பாக கல்முனை வலயத்தை சேர்ந்த அதிபர்கள் சிலருக்கு அக்கரைப்பற்று மற்றும் மட்டக்களப்பு மத்திய
கல்வி வலயங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் ஏனைய கல்வி வலயங்களைச் சேர்ந்த எந்தவொரு அதிபருக்கும் வெளி வலயங்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லை. இதனால் கல்முனை வலயத்திலுள்ள சில பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்படலாம் என்பதை உணர முடிகிறது.
மேலும், சில பாடசாலைகளில் நியமனம் வழங்கப்பட்ட நாள் முதல் சுமார் 15 தொடக்கம் 20 வருடங்கள் வரை கடமையாற்றுவோர் இந்த இடமாற்ற பட்டியலில் உள்ளீர்க்கப்படாமல் இருப்பதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறு சில அதிபர்களுக்கு சலுகை வழங்கப்பட்டிருக்கின்ற நிலையில், மற்றும் சில அதிபர்களுக்கு தூர இடங்களுக்கும் வலயங்களை வெளியேயும் இடமாற்றம் வழங்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
ஆகையினால் இந்த இடமாற்றத் திட்டத்தை எவருக்கும் பாதிப்பில்லாமல் நேர்மையாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் வேண்டுகோள் விடுப்பதாகவும் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் தெரிவித்துள்ளார்.
(அஸ்லம் எஸ்.மௌலானா)