இணக்க அரசியலே இன ரீதியான நெருக்குவாரங்களுக்கு விடிவைத்தரும்.
2/3 பெரும்பான்மையுடன் வலுவான அரசாங்கம்: இணக்க அரசியலே இன ரீதியான நெருக்குவாரங்களுக்கு விடிவைத்தரும்
கல்முனை மாநகர முதல்வர் றகீப் தெரிவிப்பு
மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வலுவான அரசாங்கமொன்று நாட்டை ஆட்சி செய்கின்ற சூழ்நிலையில் முஸ்லிம் சமூகம் இணக்க அரசியலை முன்னெடுப்பதன் மூலமே இன ரீதியான நெருக்குவாரங்களில் இருந்து விடுதலை பெற முடியும் என கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.
கல்முனை மாநகரமுதல்வர் செயலகத்தில் புதன்கிழமை (03) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளிகையில் அவர் மேலும் கூறியதாவது;
எமது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் சிலரும் உயர்பீட உறுப்பினர்கள் சிலரும் மு.கா. எம்.பிக்கள் இருபதாவது திருத்த சட்டத்தை ஆதரித்தமையானது பெரும் துரோகம் என்ற அடிப்படையில் தமது முகநூல்களில் தொடர்ச்சியாக விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து, மக்கள் மத்தியில் தப்பபிப்பிராயங்களை பரப்பி வருகின்றனர். தனிப்பட்ட கசப்புணர்வு காரணமாகவே அவர்கள் இவ்வாறு கூறி வருகின்றனர்.
இருபதாவது திருத்தம் என்பது ஜனாதிபதிக்கு புதிதாக எந்த அதிகாரத்தையும் பெற்றுக் கொடுக்கவில்லை. 19ஆவது திருத்தத்திற்கு முன்பிருந்த அதிகாரங்களை விடவும் குறைவான அதிகாரங்களே தற்போது வழங்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதியாக இருக்கின்ற ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என்பதை முன்னிலைப்படுத்தியே 19ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டிருந்தது. 20ஆவது திருத்தத்திலும் அது உள்ளடக்கப்பட்டிருக்கிறது. காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களும் அரசியலமைப்பில் மாற்றங்களை செய்து கொண்டே வந்துள்ளன. அதேவேளை ஜனாதிபதி முறைமையை சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்களாகிய நாம் சமூகம் சார்ந்த பேரம் பேசலுக்காக ஆதரித்துக் கொண்டிருக்கிறோம்.
நாங்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்திருந்தோம். ஆனால் மாற்று அரசாங்கம் அமைந்தது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைந்திருக்கின்ற சூழ்நிலையில் அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்து கொண்டு போகும் நிலை காணப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் மரணிக்கும் எமது முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டு வந்தன. பேரினவாதிகளின் இன ரீதியான சிந்தனை மேலோங்கியிருந்தது. இதனைத் தணிப்பதற்கு எமக்கு எவ்வித வழியுமிருக்கவில்லை.
இவ்வாறான ஒரு பின்னணியிலேயே எமது கட்சியின் எம்.பி.க்கள் 20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தனர். சமூகம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே அவர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தனர். அதில் பிரதானமாக இருந்தது ஜனாஸா எரிப்பாகும். நல்லடக்கம் செய்வதற்கான வாய்ப்பு பெற்றுத்தரப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டது. அரசாங்கத்தினால் பலதரப்பட்டவர்களினதும் இணக்கத்துடன் கட்டம் கட்டமாகவே நடவடிக்கைகளை முன்நகர்த்த வேண்டியிருந்தது.
இப்போது அடக்கம் செய்வதற்கு அனுமதி கிடைத்திருக்கிறது. இதன் மூலம் எமது எம்.பி.க்களின் நல்லெண்ணமும் முயற்சிகளும் வீண்போகவில்லை என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் எமது மக்களும் சிவில் அமைப்புக்களும் தொடர்ச்சியாக முன்வைத்து வந்த கோரிக்கை, போராட்டங்கள், சர்வதேச அழுத்தங்கள், 20க்கு ஆதரவளித்த எம்.பிக்களின் உடன்பாடுகள், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மாநாடு, அங்கு இலங்கைக்கு சார்பாக அரபு, முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெறவேண்டிய தேவை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயம் என்று பல விடயங்களும் ஒன்றிணைந்தே அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் எமது கட்சி எம்.பி.க்களின் முயற்சியும் முக்கிய பங்கை வகித்திருக்கிறது.
இப்போது அடக்கம் செய்யலாம் என்கிற வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ள போதிலும் இடம் தொடர்பிலான இழுபறிகள் எழுந்துள்ளன. அரசாங்கத்தினால் இரணைதீவு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கு பல தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. ஆகையினால் அரசாங்கம் அதனை மீள்பரிசீலனை செய்ய முன்வர வேண்டும். மேலும், எங்களது முஸ்லிம் ஊர்களிலேயே அடக்கம் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அதில் பாதக விளைவுகள் ஏற்படுமாயின் நாங்கள் பொறுப்புடமையை ஏற்றுக்கொள்வதற்கும் தயாராகவிருக்கிறோம். நாட்டின் எப்பகுதியில் மரணிப்போரின் ஜனாஸாக்களையும் எமது பகுதியில் அடக்கம் செய்ய முடியும். அதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும். இல்லையேல் குறைந்தபட்சம் மாவட்டம் தோறும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட வேண்டும். அல்லது ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட சம்மாந்துறை, இறக்காமம், முசலி போன்ற பிரதேசங்களிலாவது அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
இன்றைய அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம் சமூகமானது அரசாங்கத்துடன் இணக்கமாகச் சென்றே எதையும் சாதிக்க வேண்டியுள்ளது. இந்நாட்டு முஸ்லிம்கள் பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர். முஸ்லிம் தனியார் சட்டம், அபாயா விவகாரம், மத்ரஸா விடயம் என்று பல வகையிலும் நெருக்குவாரங்களை எதிர்கொண்டிருக்கின்றோம். இப்பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற வேண்டுமாயின் அரசாங்கத்துடன் சுமூகமாகப் பேசியே அவற்றை அடைந்து கொள்ள முடியும். இந்த அரசாங்கத்தைப் பொறுத்தளவில் எதிர்ப்பு அரசியலினால் எதையும் எம்மால் சாதித்து விட முடியாது என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். இன்று தமிழ் சமூகத்திலும் அரச சார்பு அரசியல் வலுப்பெற்று வருவதைக் காண்கிறோம்- என்றும் குறிப்பிட்டார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.உமர் அலி, எம்.எஸ்.நிஸார், ஏ.சி.சத்தார், எம்.எஸ்.எம்.ஹாரிஸ் நவாஸ், சட்டத்தரணி ஆரிக்கா காரியப்பர், நஸ்ரின் முர்ஷித் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
(அஸ்லம் எஸ்.மௌலானா)