வெடி குண்டு அச்சுறுத்தல் காரணமாக தாஜ்மஹால் தற்காலிகமாக பூட்டப்பட்டது.
வெடி குண்டு அச்சுறுத்தல் காரணமாக முகலாய காலத்தின் நினைவுச்சின்னமான தாஜ்மஹால் இன்று தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்தியாவின், ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால் வளாகத்திற்குள் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், அது சிறிது நேரத்தின் பின்னர் வெடிக்கும் என்று உத்தரபிரதேச காவல்துறைக்கு கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து தாஜ்மஹால் மூடப்பட்டதுடன், அங்கிருந்த ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகளையும் வெளியேறுமாறு பணிக்கப்பட்டது.
அதன்பின்னர் காவல்துறையினர் பாதுகாப்பு அமைப்பு குழுக்களுடன் சென்று தாஜ்மஹால் வளாகம் முழுவதும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
எனினும் அவ்வாறன எந்த வெடிபொருள் சாதனங்களும் இதன்போது மீட்கப்படாத நிலையில் தாஜ்மஹாலின் பாதுகாப்பும் உறுதிபடுத்தப்பட்டு, நினைவுச்சின்னம் மீண்டும் காலை 11.15 மணியளவில் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் காவல்துறையினருக்கு கிடைத்த போலியான அந்த வெடி குண்டு அச்சுறுத்தல் தொடர்பான அழைப்பு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.