யாழ். மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆர்ப்பாட்டம்!
யாழ். மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆர்ப்பாட்டம்!
வடக்கு மாகாண காணிகளின் ஆவணங்களை அநுராதபுரத்திலுள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகத்துக்கு மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்னால் அதன் நுழைவாயிலை மறித்தவாறு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும், கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
வடக்கு மாகாண காணிகள் தொடர்பான ஆவணங்களை அநுராதபுரத்திலுள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகத்துக்கு மாற்றும் திட்டத்தை உடனடியாக அதிகாரிகள் கைவிட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில், பிற்பகல் 2.30 மணியளவில் சம்பவ இடத்துக்கு வந்த யாழ். மாவட்ட செயலாளர் க.மகேசனிடம், “வடக்கு மாகாண காணி சீர்திருத்த அலுவலகத்தின் ஆவணங்களை வடக்குக்கு வெளியே எடுத்துச் செல்லக்கூடாது என யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் வலியுறுத்தியபோதும் அதனையும் மீறி இன்று அந்தத் திணைக்களத்துக்குரிய ஆவணங்கள் வடக்குக்கு வெளியே எடுத்துச் செல்லப்படவுள்ளன என்று அறிந்தமையாலேயே இந்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றோம். இதற்கான எமது ஆட்சேபணையை அமைச்சு மற்றும் ஆணைக்குழுவுக்குத் தெரிவித்து ஆவணங்களை எடுத்துச் செல்லாமல் தடுக்க ஆவன செய்ய வேண்டும்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் தெரிவித்தார். அத்துடன் அது தொடர்பான மகஜரையும் மகேசனிடம் அவர் கையளித்தார்.
இந்த மகஜரைப் பெற்ற யாழ். மாவட்ட செயலாளர், “இது தொடர்பாக காணி அமைச்சின் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு விபரத்தைத் தெரிவித்துள்ளோம். இருப்பினும் குறித்த முடிவானது ஆணைக்குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதால் உடனடியாக ஏதும் செய்ய முடியவில்லை எனப் பதிலளிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆணைக்குழுவுக்கு உங்கள் மகஜர் அனுப்பிவைக்கப்படும். நீங்களும் முயற்சி செய்யுங்கள்” என்றார்.