கணவரிடமிருந்து பணம் பெற குழந்தையை அடித்துத் துன்புறுத்தும் காணொளி தயாரித்த பெண் உள்ளிட்ட 3 பேர் கைது

குவைத்தில் பணியாற்றிவரும் தனது கணவரிடம் இருந்து பணம் பெறுவதற்காக ஒன்பது மாத ஆண் குழந்தையை அடித்துத் துன்புறுத்தும் காணொளியை தயாரித்த பெண் உட்பட மூவரை யாழ். பொலிஸார் கைது செய்தனர்.
திருகோணமலையைச் சேர்ந்த பெண் ஒருவர் குவைத் நாட்டில் தங்கியிருந்த போது இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இதன்போது குவைத்தில் குழந்தை பிறந்த நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நாடு திரும்பி தற்போது யாழ். மணியந்தோட்டம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றார்.
தனக்கு கணவர் பணம் அனுப்பவில்லை என்ற விரக்தியில் இருந்த குறித்த பெண், குழந்தையைத் தாக்கும் காணொளி எடுத்து கணவருக்கு அனுப்பும் நோக்கில் அவர் குழந்தையைத் தாக்கும் சமயம் அவரின் உடன் பிறந்த சகோதரன் அதை ஒளிப்பதிவு செய்துள்ளார். இதேநேரம் மற்றுமொருவர் அருகில் இருந்துள்ளார்.
இந்த விடயம் நல்லூர் பிரதேச செயலாளரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து பிரதேச செயலாளரின் உத்தரவின் பெயரில் சிறுவர் நன்நடத்தை திணைக்களத்தினர், சிறுவர் பாதுகாப்புத் திணைக்களத்தினர் மற்றும் கிராம சேவகர் ஆகியோர் சகிதம் நேரில் சென்ற யாழ்ப்பாணம் பொலிஸார் குழந்தையை மீட்டதுடன் குழந்தையைத் தாக்கிய தாயார், அதனை ஒளிப்பதிவு செய்து பணம் ஈட்ட உதவியவர் மற்றும் அந்தச் செயலுக்கு உதவியவர் என மூவரையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.