சத்தம் இன்றி இருந்துவிட்டு ஐ.நாவில் இலங்கையை ஆதரிக்குமாம் இந்தியா.
சத்தம் இன்றி இருந்துவிட்டு ஐ.நாவில்
இலங்கையை ஆதரிக்குமாம் இந்தியா
இப்படி நம்புகின்றார் அமைச்சர் வீரசேகர
“இந்தியா எப்போதும் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. அவர்கள் இப்போது அமைதியாக இருந்தாலும் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான புதிய பிரேரணை மீதான வாக்கெடுப்பின்போது எமக்குச் சாதகமாகவே முடிவு எடுப்பார்கள்.”
இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இந்தியா எவ்வாறான நடவடிக்கை எடுக்கும் என்ற கேள்வி பல தரப்பினராலும் எழுப்பப்பட்டு வருகின்றது. இப்போது தமிழகத்தில் தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ள நிலையில் அவர்களின் உள்ளக அரசியல் நகர்வுகள் காணப்படும்.
யார் வலியுறுத்தினாலும் போர்க்குற்றங்கள் தொடர்பில் எந்தவொரு விசாரணையையும் நடத்த இடமளிக்கமாட்டோம்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரும் பிரேரணை மீது நடத்தப்படும் வாக்கெடுப்பில் நாம் தோற்றாலும்கூட சர்வதேச நாடுகள் இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் அதிகாரத்தை வழங்கப்போவதில்லை.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் முன்வைத்த அறிக்கை பொய்களால் தயாரிக்கப்பட்ட ஒரு அறிக்கையாகும். இந்த அறிக்கையை நாம் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
பிரேரணையை நாம் நிராகரிப்பதாகத் தெரிவித்த பின்னரும் எமக்கு ஆதரவாகப் பல நாடுகள் குரல் கொடுத்துள்ளன. பிரதான நாடுகள் எமது பக்கம் உள்ளன என்பது எமக்குத் தைரியமளிக்கின்றது” – என்றார்.