காதுகளும் கதவுகளும்! – சிறுகதை: கோதை
தூங்கி எழுந்தது போன்ற உணர்வுடன் அவன் கண்ணை விழித்து, தான் எங்கிருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்த முயன்ற போது தான், மிருதுவான, ஆனால் மென்மையான வெட்பத்துடன் ஒரு சோடிக் கைகள் அவனது கைகளைப் பிடித்திருந்ததை உணர்ந்தான். தலையைத் திருப்பிப் பார்க்கக் கூடிய ஒரு நிலைக்குத் தன்னை சுதாகரித்துக் கொண்டவனுக்கு, அந்தக் கைகளிலில் பச்சை குத்தியிருந்த ரோஜாப்பூக்களின் அழகு, அவனுக்கான நினைவுகளை மீட்டெடுக்கப் பிரயத்தனம் செய்தன. இந்தக் கைகளை எங்கோ பார்த்திருக்கிறேன், ரசித்திருக்கிறேன்! ரோஜாப் பூக்கள் போன்ற அந்தக் கைகளிலும் ரோஜாப்பூக்களா என வியந்தும் இருக்கிறேன் என்பதும் நினைவுகளின் சுழற்சியில் அவனுக்கு வந்து போனது.
அந்தக் கைகளின் சொந்தக்காரியையோ அவளது முகத்தையோ அவன் முன்னெப்போதும் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்ததில்லை என்பது மட்டும் திடமாக அவனுக்குத் தெரிந்தது. ஆனால் அவள் எப்படி இங்கே என்பது தான் புரியாத புதிராய்…
தான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அவனுக்கு புரிந்தது. அவனுக்கு முதுகைக் காட்டியபடி வைத்தியருடன் அவள் பேசுவதும் பல மைல் தூரத்திற்கப்பால் கேட்பது போலிருந்தது. அவள் முகம் தெரியவில்லை, பாதி மயக்கத்திலும் அவள் முகம் தேடி அவன் கண்கள் அலைந்தன. இன்று மட்டுமல்ல அவளைப் பார்க்கவென பரிதவித்த கடந்த பல மாதங்களும் மனக்கண்ணில் வந்து போயின.முதன் முதலாய் ஒரு பெண்ணின் நெருக்கத்தை தேடி அலைந்த அந்த உணர்வு அவனுக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது.
பாறாங்கல் ஒன்றைத் தலையில் தூக்கி வைத்திருப்பது போன்ற வலியோடு, அப்போது தான் அவனுக்கு தனக்கு என்ன நடந்திருக்கும் என்பதான கேள்வி ஒன்று எட்டிப் பார்த்தது. முழுவதும் ஞாபகம் வரவில்லை. இருந்தாலும் அவன் மிகப்பிரயத்தனப்பட்டு சில நினைவுகளை சுழியோடிப் பிடித்துக் கொண்டான்.
******************************************************************************
வழமை போலவே அன்றும் விடிகாலை ஐந்தரை மணிக்கு சொல்லி வைத்தாற் போல் கீழே கதவை திறக்கும் சத்தமும் அதைத் தொடர்ந்து சில வினாடிகளில் மீண்டும் கதவை அறைந்து சாத்தும் சத்தமும் கேட்டது. தினசரி வேலைக்குப் போக முன்னே வீட்டுக்கழிவுகளைக் கட்டி வெளியேயுள்ள கழிவுப்பெட்டிக்குள் எறிந்து விட்டுப்போகும் அந்தப் பெண்ணின் முகத்தை அவன் தன் மூன்றாவது மாடியிலிருந்த அறையின் சாளரத்தினூடே மறைந்து நின்று பார்க்கும் போதெல்லாம், அவனுக்குத் தெரிந்தது அவள் கைகள் மட்டுமே. கழிவுப்பையை எறியும் போது கூட மிக நிதானமாகவும், நேர்த்தியாகவும் அவள் அதை சிரத்தையுடன் செய்வது போலிருக்கும். குளிருக்காக தன் தலையை குளிர் அங்கியால் மூடியபடி, ஒரு ரோஜாப்பூ பறந்து போவது போல மெதுவாக அவள் அந்த மென்பனியில் இன்றும் மறைந்து போனாள். கடந்த சில மாதங்களாகவே முகம் தெரியாத அந்த ரோஜாப்பூவிற்காக அவன் மனதில் இனம் புரியாத ஒரு தேடல் பரிதவிப்பாய் மாறிக்கொண்டிருந்தது.
இப்போதைக்கு மூன்று பேரில் ஒருவர் வீட்டிலிருந்து வெளியே போய் விட்டது உறுதியாகியது அவனுக்கு. அடுத்த இரண்டு கதவுச் சத்தங்கள் வரும் வரை அவன் கட்டிலை விட்டு இறங்க மாட்டான். இதுவே கடந்த பல மாதங்களாக, முக்கியமாக தொற்றுப் பரவத் தொடங்கிய பேரிடர் காலத்திலிருந்து நடை பெற்று வருகிறது. மாதங்கள் கடந்ததில், ஊரடங்கிய நிலைமை வழமையானதாய் போக, தனிமையாய் இருப்பது, வழக்கமாகிப் பழக்கப்பட்டுப் போயிற்று. அது ஒரு வகையில் அவனுக்கு ஆறுதலாகவும் இருந்தது. யாரையும் முகம் பார்த்துக் கதைக்க வேண்டிய அவசியம் இல்லாமற் போயிற்று.
மனிதர்களை அதுவும் புதிய மனிதர்களைச் சந்திப்பதென்பது மனதின் ஆழத்தில் ஒரு பயத்தை, ஒரு பதற்றத்தை அல்லது ஒரு இனம் தெரியாத படபடப்பை அவனுக்குத் தோற்றுவித்திருந்தது. இந்த நாட்டில் அவனுக்கென்று கைவிட்டு எண்ணக்கூடிய நண்பர்களே இன்றுவரை இருக்கிறார்கள். வேறு யாருக்கும் அவன் சக பணியாளர்களைத் தவிர அவனது இருப்பிடமோ வேறு தனிப்பட்ட விபரங்களோ தெரியாது. தெரிய வரக்கூடாது என்பதில் அவன் தன்னால் முடிந்தவரை சிரத்தை எடுத்துக் கொண்டான்.
அவனது அறைக்கும் வெளியே இருந்த வீதிக்குமிடையே ஒரு பத்து யார் தூரம் தான் என்றாலும், வாகனங்களின் இரைச்சல், வீதி ஓரமாக நடந்து போகும் பாதசாரிகளின் காலடிச் சத்தங்கள், சில வேளைகளில் அவர்கள் தொலைபேசியில் சத்தமாக கதைக்கும் உரையாடல்கள் என எல்லாமும் அவனுக்கு துல்லியமாக கேட்கத் தொடங்கியிருந்தன. இதற்கு முன் இவையெல்லாம் காதுக்குக் கேட்காமல் இல்லை. வழமையான சத்தங்கள் தாம், ஆனால் இப்போதெல்லாம் ஒவ்வொரு சின்னஞ்சிறு ஒலியும் வழமையை விட பிரமாண்டமாகக் கேட்பது போல் ஒரு உணர்வு. அது பிரமையாய் இருக்குமோ என்று பல தடவை யோசித்தும் பார்த்தான். எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.
அவனது அறையோடு ஒட்டிய வீதியின் ஓரமாக ஓங்கி வளர்ந்திருந்த மரங்களில் இருந்த மரக்கிளைகளின் உறவினர்கள் விடி காலையிலேயே இதமாகப் பாடத் தொடங்கி விட்டனர். கீச்சுக் கீச்சென்ற பாடல்கள் அவனுக்கு பிடித்திருந்தாலும் அவர்களின் பாடல்களின் ஒலி ஒவ்வொரு நாளும் வர வர அதிகமாகி வருவது போலவே அவனுக்கு நினைக்கத் தோன்றியது. அவர்களின் ரீங்காரமும் சுரமும் சுருதியுமாக மிகத் தெளிவாகக் கேட்பதை அவன் ரசிக்கத் தொடங்கி ஒரு சில நிமிடங்கள் கடந்த போது மீண்டும் அவன் அறைக்கு வெளியே, கீழ்த் தட்டிலிருந்து இரண்டாவது தடவையாக கதவு திறக்கும் ஓசையும் பின் அதை அறைந்து சாத்தும் ஓசையும் கேட்டு அடங்கியது.
அவன் கடிகாரத்தைப் பார்க்காமலே இப்போது மணி ஐந்தே முக்கால் என நினைத்துக் கொண்டான். ஆடாமல் அசையாமல் படுத்திருந்தால் இயற்கை உபாதைகளை வராமல் தடுக்கலாம் என்ற மனப்பக்குவமும் நாளடைவில் வந்து விட்டிருந்தது. இன்னும் ஒரேயொரு கதவுச் சத்தம் தான் மிச்சமிருந்தது. அதை ஆவலோடு எதிர்பார்த்திருந்தான். இன்னும் ஒரு பத்து நிமிடங்களுக்குள் அதுவும் கேட்டு விடும் என்ற நம்பிக்கை வீண் போகவில்லை. இரண்டாவது தட்டிலிருந்த அறைக்கதவு திறக்கப்படும் ஓசையும் அதைத் தொடர்ந்து இதோ தட தடவென்ற காலடிச் சத்தம் வீட்டின் பிரதான வெளிக் கதவை நோக்கி நகர்ந்து போவது அவன் காதுகளுக்கு மிகத் தெளிவாகக் கேட்டது . வர வர அவன் காதுகள் இரண்டும் மிகவும் தீவிரமாக வேலை பார்ப்பது போல இருப்பதை அவனால் புறம் தள்ள முடியவில்லை.
அப்பாடி வீட்டிலிருந்த மூன்று மனிதர்களும் வேலைக்குப் புறப்பட்டு விட்டார்கள், இனி மதியம் தாண்டி, மாலை ஐந்து, ஆறு மணி வரையில், அவர்கள் வருவதற்கிடையில் அவனுக்குச் செய்ய வேண்டிய வேலைகள் எத்தனையோ இருந்தன. அவற்றுக்கான சிறிய நேர அட்டவணை ஒன்று அவன் அலுவலக மேசையின் சுவரில், நிறங்கள், வேலைகளின் முக்கியத்துவம் குறித்த வித்தியாசங்களைக் காட்டி நிற்க, ஓட்டப் பட்டிருந்தது.
வீட்டிலிருந்து வேலை பார்க்கத் தொடங்கிய புதிதில் எதுவுமே பிடிக்காமல், மனதில் ஒட்டாமல் செயற்கைத் தனமாய் இருந்தது என்னவோ உண்மை தான். இருந்தாலும் எல்லாம் நாளடைவில் மாறத் தொடங்கியதற்கு வலுவான காரணம் என்ன என எதையும் அவனால்ச் சுட்டிக் காட்ட முடியவில்லை. ஆனால் அவனோடு மிக நெருங்கிய உறவுகள் இரண்டு திடீரெனத் தொற்று ஏற்பட்டு இறந்து போனதும், அவன் இருந்த நாட்டில் அவசர காலச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டு, எல்லோரும் வீடு அடங்கி இருக்க வேண்டி வந்ததோடும் தான் எல்லாமுமே அவனுக்குள் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டும் என்ற கணிப்பீடு ஒன்றும் அவனுக்குள் இல்லாமல் இல்லை.
முக்கியமாக அவனுடைய வேலை தொழில் நுட்பம் சார்ந்திருந்த படியினால் அவனுக்கு அவன் பணி சார்ந்த அனைத்து பட்டறிவையும் அனுபவத்தையும் ஒரு விரல் நுனியில் வைத்திருக்க முடிந்தது. எப்போதாவது சந்தேகங்கள் வந்த போது அவனுடைய குழுவில் உள்ளவர்களுக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் அனுப்பினால் அவர்களில் ஒருவர் எப்படியாவது ஒரு பத்தே நிமிடத்தில் அந்தப் பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு காண்பதென்பதை ‘மாதிரிக் காணொளி வாயிலாக’ (demo video) அல்லது அது குறித்த ஆவணத்தில் போய் (Google document) தேவையான மாற்றங்களைச் செய்து அனுப்பி விட்டு, தொலைபேசியில் வந்து அவனுக்கு விளக்கமும் தந்து விடுகிறார்.
அதைப் பற்றி நினைத்து, அதற்காக அலட்டிக் கொள்ளும் மன நிலையில் அவன் இப்போது இல்லை என்பது தான் நிஜமாகிப் போனது.
இன்று அவனுக்கிருந்த வழமையான வேலைகளுடன் இன்னுமொரு புதிய அதிகப்படியான கடமை ஒன்றும் ஒட்டியிருந்தது. அம்மாவுக்கு தொலைபேச வேண்டும், அவனது குரலுக்காக ஏங்கிப் பார்த்துக் கொண்டிருப்பாள். இன்று அவனது பிறந்த நாள், ஏதோ அவளுக்குத் தான் பிறந்த நாள் போல கடந்த முறை கதைத்த போதே சொல்லி வைத்திருந்தாள். உலகில் உள்ள அம்மாக்கள் அனைவருக்கும் இது போல இருக்குமா அல்லது இவளுக்கு மட்டும் தான் அநியாயத்துக்கு இப்படி ஒரு ஏக்கமா? அம்மாவை நினைத்த போது கண்களில் இயல்பாக ஈரம் தோன்றியதை அவன் கைகள் பட்டெனத் துடைத்து விட்டன. அவள் நினைவுகள் அந்தக் குளிரின் கடுமையைக் குறைத்து தற்காலிகமாக ஒருவித வெப்பத்தை அந்த அறையில் கொண்டு வந்ததைப் போல உணர்ந்தான்.
அவனுக்கு அம்மா மீதிருந்த பாசத்தையும் மீறி அன்றைய பொழுதில் முடிக்க வேண்டிய வேலைகளுக்குள், இதுவும் ஒரு வேலையாக, வேலைப்பளுவை அதிகரித்த மனோநிலையானது சாதுவான எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. நேர அட்டவணையில் மிகவும் நெருக்கமான இரண்டு மதிய வேளை அலுவலகக் கூட்டங்களுக்கிடையே தொலை பேச வேண்டியதையும் சிவப்பில் அடிக்கோடிட்டிருந்தான். அவனுடைய போதாத காலம், அவனுடைய பிறந்த நாள் புதன் கிழமையில் வந்து தொலைத்திருந்தது. புதன் கிழமைகளில் வழமையாக இருக்கும் அவன் சார்ந்த குழுவின் கூட்டத்தோடு அலுவலகப் பணியாளார்கள் அனைவரும் சேர்ந்து பங்கு பற்ற வேண்டிய வழமையான கூட்டமும் ஒன்று இருந்தது. பரவாயில்லை, முதலாவது கூட்டத்திற்கும் இரண்டாவது கூட்டத்திற்குமிடையே இருபத்தியைந்து நிமிட இடைவெளி இருந்தது. அந்த இடைவெளிக்குள் எப்படியும் அம்மாவுக்கு தொலைபேசி விடவேண்டும் என முடிவெடுத்துக் கொண்டான்.
முதல் நாள் இரவு வேலைப்பளுவினால் மின் அஞ்சல்களுக்குப் பதில் எழுவதை சற்றே ஒதுக்கி வைத்திருந்தான். அதன் விளைவு இன்று தெரிகிறது, பல்வேறு விதமான மனிதர்களின் தேவைகளும் கேள்விகளும் அவனைச் சற்றே களைப்படைய வைத்தது. பதில் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல்களுக்கு ஏற்றாற்போல் பதில்களை அனுப்பினான். சில மின் அஞ்சல்களுக்கு ஆவணங்கள் இணைத்து அனுப்ப வேண்டிய கட்டாயமிருந்தது. ஒவ்வொன்றையும் மிகக் கவனமாகக் கையாண்டவன், மேசைக்கு எதிரே தினசரி நேர அட்டவணையைக்குப் பக்கத்தில் இருந்த சுவர் மணிக்கூட்டைப் பார்த்ததும் ஒரு வினாடி அதிர்ந்து போனான். முதலாவது கூட்டம் தொடங்குவதற்கு இன்னும் ஐந்தே நிமிடங்கள் இருந்தன.
உடனடியாக, தற்சமயம் செய்து கொண்டிருந்த மின் அஞ்சல் தொடர்பான ஆவணங்களை சேமித்து வைத்துவிட்டு, மின்னம்பல வழி (zoom meeting) கூட்டத்திற்கு தன்னை தயார்படுத்தி, அதில் அமர்ந்து கொண்ட அந்த நிமிடத்தில் கூட்டம் ஆரம்பமானது. அவன் எப்போதுமே கூட்டங்களுக்கு இணையவழியிலோ அல்லது இப்பேரிடர் காலத்தின் முன்னே நேரடி வருகைகளுக்கோ பிந்திப் போனதில்லை. அவனுக்கு அலுவலக ஊழியர்கள் மத்தியில் இதற்கென நல்லதொரு பெயர் எப்போதுமே இருந்து வருகிறது. அதைப் பேணிப் பாதுகாப்பதில் அவனுக்கொரு அலாதியான மகிழ்ச்சி மனதின் ஆழத்தில் இருப்பது அவனுக்கு மட்டுமே தெரியும்.
கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் ஒரு வித ஆர்வத்துடனும் அதே சமயம் புன்னகையுடனும் இருந்தது அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் அனைவருமே அவனுடன் ஒரு அலுவலகத்தின் பணி சார்ந்து வேலை பார்ப்பவர்கள். எதிர்வரும் வாரத்தில் செய்ய வேண்டிய வேலைகளைத் திட்டமிட்டு, அவற்றை அவன் உட்பட தமது கடமைக்கான பங்கை அனுப்பியிருந்ததால் அதை எல்லோருக்கும் சமர்ப்பித்து, அதில் எதாவது மாற்றங்கள் அல்லது மேற்கொண்டு அத்துடன் இணைக்க வேண்டிய கடமைகள் ஏதாவது உண்டா எனப்பார்ப்பதே அக்கூட்டத்தின் பிரதான நோக்கமாயிருந்தது.
இருந்தாலும் கூட்டம் அதிகாரபூர்வமாக ஆரம்பிப்பதற்கு முன்னர் அனைவரும் ஒருவருக்கொருவர் கை அசைத்தோ, புன்னகைத்தோ அல்லது வணக்கம் சொல்லியோ கொண்டது அவனுக்கு பெரியதொரு ஆறுதலைத் தந்தது. அவர்கள் அவனுக்குத் தெரிந்தவர்கள், அவர்களுடன் பழகுவது பாதுகாப்பானது, அவர்கள் அவனுக்கு பல வழிகளிலும் அவன் பணி சார்ந்த தொழில் நுட்பங்களை அவனுக்கு அறிமுகம் செய்து, அது தொடர்பான சிக்கல்களைக் கூட தீர்ப்பவர்கள். வாரத்தில் ஒரு முறை இப்படியாவது அவர்களைச் சந்திப்பது அவனுக்கு மனத்திருப்தி தந்தது.
கூட்டம் அவனுடைய சில கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டதுடன் அது தொடர்பாக சில மாற்றங்களையும் ஏற்படுத்திக்கொண்டது. அவனும் வணக்கம் சொல்லி விடை பெற்றுக் கொண்டான்.
நேர அட்டவணையை நிமிர்ந்து பார்த்ததில் அவன் தன்னுடைய தனிப்பட்ட மின் அஞ்சல்களை வாசிக்காதது தெரிய வந்தது. அவசரம் அவசரமாக அந்தப் பக்கத்தை திறந்து, முக்கியமான மின் அஞ்சல் ஏதாவது வந்துள்ளதா என ஆராய்ந்தான். வீட்டின் சொந்தக்காரர் ஒரு மின் அஞ்சல் அனுப்பியிருந்தார், அதை அவசரமாகப் பிரித்தான். வழமையாக அவரிடமிருந்து வாடகைக்கான நன்றி சொல்லி ஒரு வரியில் ஒரு அஞ்சல் வரும். இது என்னவோ வித்தியாசமாக இருந்ததில் அவன் வாசிப்பதை ஆறப்போடாமல் கண்ணால் மேயத் தொடங்கினான்.
அன்புள்ள என்று தொடங்கி, அவனுக்கு ஒரு விடயத்தை தெரிவிப்பது நல்லது என்ற ரீதியில் கடிதம் தொடர்ந்தது. இந்த வீட்டில் சில திருத்த வேலைகள் இருப்பதால், அந்த வீட்டில் இருக்கும் மற்றைய அறைகளில் இருப்பவர்களை வீட்டை விட்டு எழுப்புவதற்கு அறிவித்தல் கொடுத்து விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவனது அறை நல்ல நிலையில் இருப்பதால் அவன் வெளியேற வேண்டிய அவசியம் இல்லை எனவும் அடிக்கோடிட்டு எழுதியிருந்தார். இவ்வீட்டில் இருக்கும் மற்றவர்கள் அனைவரும் அவனுக்குப் பின்னர் தான் அவ்வீட்டிற்கு குடி புகுந்திருந்தனர். அவர்களும் அவனும் எப்போதுமே சந்தித்ததில்லை. அவர்களுக்கு அவன் இந்த அறையில் இருப்பது தெரிந்திருந்தும் அவரவர் வேலையும் வீடுமாய் இருந்த இந்த பேரிடர் காலம் அவனை முற்றாக இவ்வுலகத்தில் இருந்து வெகு தூரத்தில் வைத்திருந்தது. அவன் ஒருவன் தான் அந்த வீட்டில் நம்பிக்கைக்குப் பாத்திரமான நீண்ட கால வாடகைக்காரனாயிருப்பதால் வீட்டின் உரிமையாளருக்கும் அவனுக்கும் இடையில் ஒரு நல்ல உறவு நிலவியது.
அவரைப் பற்றி ஒரு சில நிமிடங்கள் சிந்தித்தவன் திடீரென ஞாபகம் வந்தவனாய், நேரத்தைப் பார்த்த போது அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது! அடுத்த அலுவலக கூட்டத்திற்கு இன்னும் பதினைந்தே நிமிடங்கள் இருக்க, அந்த இடைவெளியில் அம்மாவுடன் பேசவும் சாப்பிடவும் வேண்டும் என்பதை மூளையும் வயிறும் ஞாபகப்படுத்தின. அலுவலக மேசையிலிருந்து அவசரமாய் எழுந்து, தன் அறைக் கதவில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்கண்ணாடியூடாக வெளியே யாராவது நடமாடும் அசைவுகள் இல்லை என்பதை உறுதி செய்த அதே வேளை அவன் காதுகளும் துல்லியமாக எந்த அரவமும் இல்லை என்பதை அடித்துக் கூறின. அவன் அப்படியிருந்தும் சத்தமின்றி கதவைத் திறந்து, இரண்டாவது தளத்தில் இருந்த சமையலறையை இரண்டே நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் எட்டி, கைகளை நன்றாகக் கழுவி, குளிர் சாதனப்பெட்டியில் பதப்படுத்தி வைத்திருந்த தன் உணவை நுண்கதிர் சூடாக்கியில் மூன்று நிமிடங்களில் சூடாக்கி பழையபடி தன் அறைக்குத் திரும்பிய போது கூட்டம் ஆரம்பிப்பதற்கு, இன்னும் ஐந்தே நிமிடங்கள் தான் இருந்தன.
அவசர அவசரமாக உணவு வயிற்றினுள்ளே போய் பசியை அடக்கியது, ஏற்கனவே மேசையில் வைத்திருந்த தண்ணீரையும் அருந்திக் கொண்டான். இனி மாலை ஆறு மணிவரை வயிறும் மனதும் சொல்வழி கேட்டு நடக்கும் என்பது உறுதியாயிற்று அவனுக்கு.
ஊரில் இப்போதே ஆறு மணிக்கு மேலாகி விட்டது, இதற்குப் பின் தொலைபேசினால் அம்மா சோர்ந்து போவாள், கவலைப்படுவாள், அழுதபடியே தூங்கி விடுவாள், அவளுக்கு அவன் தன் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள, இப்பேரிடர் காலத்தில் படும்பாடுகளை புரிய வைக்க முடியாது. அப்படி அவன் முயன்றதும் கிடையாது.
அவன் அம்மாவிற்கு தொலைபேசி அழைப்பை தொடர்ந்து கொடுத்தும் இணைப்பை ஏற்படுத்த முடியாது தவித்த வேளை அவனுடைய அலுவலகக் கூட்டமும் ஆரம்பித்தது. அவன் ஒரு நாளும் இல்லாதவாறு தன் காணொளி, ஒலி வாங்கி இரண்டையும் மறைத்தவாறே அம்மாவுக்கு அழைப்பை அனுப்பியவாறே இருந்தான். ஏன் அம்மா தொலைபேசி அழைப்பை இணைக்கிறாள் இல்லை என்ற யோசனை பலமாகத் தாக்கியதில் அவனுக்கு கூட்டத்தில் கவனம் செலுத்த முடியவில்லை.
அம்மாவின் இணைப்புக் கிடைத்த போது அவனுக்கு சரியாகப் பேசக்கூட முடியவில்லை. அம்மாவும் அவன் அலுவலகத்தில் பலரோடு இருப்பதாகத் தெரிந்த போது, அவசர அவசரமாக அவனை வாழ்த்தி விடை பெற்றது, அவனுக்கு ஒரு விதத்தில் நிம்மதியாக இருந்தது.
அலுவலகக் கூட்டம் முடிந்த கையோடு அவனுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் அனைத்தும் அவன் கேட்டபடியே ஒரு பல்பொருள் அங்காடியொன்றிலிருந்து வீட்டுக்கு வெளியே வந்திறங்கியிருந்தன. யாரும் பார்க்க முதலே அவற்றை எடுத்து வந்துவிட வேண்டும் என்ற துடிப்பில் சாளரத்தின் வாயிலாக, பனி படர்ந்திருந்த முன் முற்றத்தை நோட்டம் விட்டு, யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பின் மெதுவாக கீழ்த் தளத்திற்கு விரைந்தான்.
இப்படியெல்லாம் பிந்தியதற்கு அந்த ஒரு தொலைபேசி தான் காரணம் எனத் தோன்றியதில் தேவையில்லாமல் அம்மா மீது கோபம் வந்தது. முன் கதவைத் திறந்து முற்றத்திற்கு வந்து உணவுப் பெட்டிகளைத் தூக்கிய போது அவனது வலது கால் பனியில்ச் சறுக்கி அவனை நிலை குலையப் பண்ணியது மாத்திரமில்லாமல், சரிவான ஒற்றையடிப் பாதையில் அவனை வழுக்கி இழுத்துச் சென்று மதிலைக் கடந்து வெளியே தள்ளியது.
மதிலின் முனையில் தலையடிபட்ட ஞாபகம் இருந்தது. அவன் தன் கைகளை அந்தப் பனிப்பாறைகளில் ஊன்றி எழும்ப எத்தனித்ததும் ஞாபகம் வந்தது, அவ்வளவு தான், அதற்கு மேல் எதுவும் நினைவில் இல்லை.
******************************************************************************
அந்த ரோஜாப்பூ இப்போது தன் முதுகை அவனுக்கு காட்டியபடியே, வைத்தியருக்கு தன் அழகான ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டிருந்தது எல்லாம் மிகத் தெளிவாக அவனுக்கு கேட்கத் தொடங்கியது.
“இவர் நான் இருந்த வீட்டில் தான் ஒரு அறையில் இருந்தார் என்பது எமக்கு ஒருவருக்குமே தெரிந்திருக்கவில்லை. பனியில் சறுக்கி விழுந்து, தலையில் பலமாக அடிபட்டதில் மயங்கியிருக்க வேண்டும் என்பதால் அவரது காற்சட்டைப் பையைச் சோதனை போட்டதில் தான் அவர் முகவரியைக் கண்டு பிடித்தோம். நல்ல வேளையாக சரியான நேரத்தில் அம்புலன்சில் வைத்தியசாலை வரை கொண்டு வந்து சேர்த்தாயிற்று. என்னுடைய கடமை முடிந்தது. நான் இன்றுடன் வீடு மாறிப் போகிறேன்.’
அந்த ரோஜாப்பூ முகம் காட்டாமலே அவனிருந்த வைத்தியசாலை அறையிலிருந்து மிக மெல்லிய துள்ளலுடன் மறைந்து போனது. அவனால் பேச எத்தனித்தும் பேச முடியவில்லை, ஆனால் அவள் பேசுவது யாவும் தெளிவாகக் கேட்டது. அவன் கண்களில் கண்ணீருடன் அவள் காலடிச் சத்தத்தை நீண்ட நேரத்திற்கும் , பின் நீண்ட காலத்துக்கும் மிகத் துல்லியமாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.