மகளிர் தின வாழ்த்துச் செய்தி பெரோஸா முஸம்மில்.
முன்னொருபோதும் இல்லாத சவால்களுக்கு முகங்கொடுத்து, புதிய வாழ்க்கை முறையை நோக்கி பயணிக்கும் இந்த அசாதாரண சூழ்நிலையில் மகளிர்கள் பங்கு பிரதானமானது என ‘காந்தா சவிய’ பெண்கள் அமைப்பின் தலைவி பெரோஸா முஸம்மில் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (மார்ச் 08) இலங்கை உட்பட உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
மகளிர்களின் சாதனைகள் இன்று பல வகையிலும் பெறுமதிமிக்கவையாக இருந்து வருகின்றன. அடுப்பங்கரைகளிலும் அடிமைப்பொருளாகவும் ஒரு காலத்தில் அடைபட்டுக்கிடந்த பெண்கள், இன்றைய நவீன காலத்தில், தமது குடும்பத்தை வழிநடத்த குடும்பத்த தலைவருக்கு உறுதுணையாக வீட்டில் இருந்தவாறே பெண்கள் தொழில் முனைவோர்களாக உருவாகிவருகின்றனர்.
அதேவேளை உலகின் முதலாவது பெண் பிரதமர் உள்ளிட்ட பல பெருமைகளை பெற்றுள்ள எமது இந்த அழகிய நாட்டில், பிரதான மகளிர் அமைப்பொன்றுக்கு தலைமைதாங்கி வழி நடத்தக் கிடைத்தமை பெருமகிழ்ச்சியளிக்கிறது.
நாட்டின் பல இடங்களில் செயற்பட்டு வரும் எமது ‘காந்தா சவிய’ பெண்கள் அமைப்பின் பிரதான நோக்கம் மகளிர்களின் கரங்களை பலப்படுத்துவதாகவே காணப்படுகிறது. மகளிர்களின் வாழ்வு மேம்பட பல்வேறு மகத்தான திட்டங்களை ‘காந்தா சவிய’ அமைப்பு வெற்றிகரமாக செயல்படுத்திவருகிறது.
அரசின் கொள்கைப் பிரகடனத்தில் மகளிர்க்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளமை எமது செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு ஆதரவாக இருப்பதாக மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் பெரோஸா முஸம்மில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இக்பால் அலி