ராஜபக்ச குடும்பத்தின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப இயங்குகிறது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

யாழ். மாநகர சபையைக் கலைக்கச் சதி என்று மேயர் மணி குற்றச்சாட்டு.
ராஜபக்ச அரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செயற்படுகின்றது என யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குற்றஞ்சாட்டினார்.
யாழ்.மாநகர சபையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“மஹிந்த ராஜபக்ச குடும்பத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப யாழ். மாநகர சபையைக் கலைத்து அரசுக்குச் சார்பாக இந்த மாநகர சபையைப் பொறுப்பேற்பதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் செயற்பட்டு வருகின்றனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் 2015ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச ஐனாதிபதித் தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதற்காக வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கும்படி வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் கோட்டாபய ராஜபக்சவை வெல்ல வைப்பதற்காக பல பிரயத்தனங்களைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் செய்தனர்.
அதேபோல் தற்போது மாநகர சபையைக் கலைப்பதற்காக மஹிந்த குடும்பத்தின் கைக்கூலியாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சிலர் செயற்படுகின்றனர்” – என்றார்.