விமலுடன் தனிப்பட்ட முரண்பாடுகள் எதுவும் இல்லை! – சாகர கூறுகின்றார்.
“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணிக்குள் நிலவும் கருத்து முரண்பாட்டைக் கொண்டு ஒரு தரப்பினர் அரசைப் பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள். இவ்விடயம் தொடர்பில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள கட்சித் தலைவர் கூட்டத்தில் கவனம் செலுத்தவுள்ளோம்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அனைத்துப் பங்காளிக் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணி கூட்டணியை உருவாக்கியது.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியாக ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டு மக்கள் ஆணையைப் பெற்றுக்கொண்டோம்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாட்டு மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை உருவாக்கினர்.
நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமாயின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
பல்வேறு கொள்கையைக் கொண்டுள்ள அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணியமைத்துள்ளபோது கருத்து முரண்பாடுகள் தோற்றம் பெறுவது இயல்பானதொரு விடயம்.
முரண்பாடுகளுக்கு உள்ளக மட்ட பேச்சுக்கள் ஊடாக மாத்திரமே தீர்வைக் காண முடியும்.
கூட்டணியின் உள்ளகப் பிரச்சினைகளைப் பொது இடங்களில் பகிரங்கப்படுத்துவதால் முரண்பாடுகள் மாத்திரமே தோற்றம் பெறும். அமைச்சர் விமல் வீரவன்சவின் செயற்பாடுகளைக் கடந்த காலங்களில் சுட்டிக்காட்டினோம். இவருக்கும் எமக்கும் இடையில் தனிப்பட்ட முரண்பாடுகள் ஏதும் கிடையாது. கூட்டணியில் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினோம்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணிக்குள் எழுந்துள்ள முரண்பாடுகளை அடிப்படையாகக்கொண்டு ஒரு தரப்பினர் அரசைப் பலவீனப்படுத்த முயற்சிக்கின்றார்கள்.
இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ள கட்சித் தலைவர் கூட்டத்தில் உரிய கவனம் செலுத்தப்படும்.
கூட்டணி பலமாக இருந்தால் மாத்திரமே அரசை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்ல முடியும்.
ஆளும் கூட்டணியையும், அரசையும் ஒருபோதும் பலவீனப்படுத்த இடமளிக்க முடியாது”என்றார்.