இலங்கைக்கு எதிரான பிரேரணையை இந்தியா ஆதரிக்க வேண்டும்! – மோடியிடம் ஸ்டாலின் கோரிக்கை

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் முன்வைக்கப்படவுள்ள தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈழத்தமிழர்களுக்கு எதிரான இலங்கையின் போர்க்குற்ற விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பாரப்படுத்த ஐ.நா. மனித உரிமைகள் சபையில் வாக்களிக்குமாறும், ஏனை உறுப்பு நாடுகளின் ஆதரவைத் திரட்டும்படியும் மோடியிடம் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மு.க.ஸ்டாலின், அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

“இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் மன்றக் கூட்டத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி லண்டனில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் சகோதரி அம்பிகையின் உணர்வுக்கும், இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களின் உணர்வுக்கும் – தொப்புள் கொடி உறவாம் ஈழத்தமிழர்களின் மீது தமிழ்நாட்டில் வாழும் ஏழு கோடி தமிழர்களுக்கு இருக்கும் உணர்வுக்கும் இந்திய மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இதே கோரிக்கையை இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்களின் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒருமுகமாக, ஏற்கனவே இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு முன்வைத்திருக்கின்றன.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அந்தக் கோரிக்கைகளை ஆதரித்து பிரதமருக்குக் கடந்த ஜனவரி மாதத்திலேயே கடிதம் எழுதி – அதில் திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கையொப்பமிட்டிருந்தனர்.

குறித்த கடிதத்தில், கடந்த காலத்தில் ஐ.நாவில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்ததை நினைவூட்டியிருந்ததுடன் தற்போதும் முன்வைக்கப்படவுள்ள தீர்மானத்தில் இந்தியா ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆகவே, ஈழத்தமிழர் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஆதரித்தும் – ஈழத் தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலும் இந்தியா வாக்களிப்பதுடன் அதற்கு ஆதரவாக உறுப்பு நாடுகளைத் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் செல்வதை ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத்தில் உறுதி செய்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது நேரடிப் பார்வையில் எடுத்திட வேண்டும்.

இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இந்தியா எடுத்துவிடக் கூடாது என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.