நடிகை ஜமுனா ராணியின் வாழ்க்கை வரலாற்று படத்தில், தமன்னா
பழம்பெரும் நடிகை ஜமுனா ராணியின் வாழ்க்கை வரலாற்று படத்தில், தமன்னாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
சமீப காலமாக வாழ்க்கையில் பல்வேறு சவால்களை கடந்து திரையுலகிலும், விளையாட்டு துறையிலும், தொழில் அதிபராகவும் சாதித்த பிரபலங்கள் குறித்த வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே வெளியான பிரபல நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு, கிரிக்கெட் வீரர் தோனி வழக்கை வரலாறு, பட்ஜெட் பிளைட்டை அறிமுகம் செய்த, கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
குறிப்பாக இயக்குனர் நாக் அஷ்வின் இயக்கத்தில், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான ‘மகாநடி’ திரைப்படத்தில், சாவித்ரி வேடத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் தேசிய விருதை பெரும் அளவிற்கு தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.
இந்நிலையில் திரையுலகில் மிகப் பெரிய அந்தஸ்தில் இருந்த நடிகைகளில் ஒருவரான ஜமுனாராணி வாழ்க்கை வரலாறு படத்தையும் படமாக்க தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. நடிப்பு மட்டும் இன்றி தொழில் ரீதியாகவும் இவர் பல்வேறு சவால்களை கடந்து வெற்றி பெற்றவர்.
ஏற்கனவே இவரது வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ஜமுனாராணி ஆக சமந்தா நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது தமன்னாவை ஜமுனா ராணி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தை சிவனகு நர்ரா என்பவர் இயக்க உள்ளார். ஜமுனா ராணி வாழ்க்கையில், தமன்னா நடிப்பது குறித்த அதிகார பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. எனினும் கீர்த்தியை மிஞ்சும் அளவிற்கு தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்துவாரா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.
ஜமுனாராணி தமிழில் மட்டும், நாக தேவதை, தங்கமலை ரகசியம், நல்ல தீர்ப்பு , உள்ளிட்ட 27 படங்களில் நடித்துள்ளார். தமிழை தவிர மற்ற தென்னிந்திய மொழிகளிலும் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.