பத்திரிகை அச்சிடுவதுபோல் அரசு பணத்தை அச்சிடுகிறது : நாடு படு பாதாளத்தை நோக்கிச் செல்கிறது – ரணில் எச்சரிக்கை
இந்த அரசாங்கம் கட்டுபாடற்ற நிலையில் பணம் அச்சிடுவதால் 2021 வருட இறுதியில் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசு வருமானத்தை குறைத்துக் கொண்டதால் இப்படி பணத்தை அச்சிட நேரிட்டுள்ளதாகவும் ஞாயிறு பத்திரிகைகள் வார பத்திரிகைகள் போன்று பணம் அச்சிடுவதாகவும் அவர் சாடியுள்ளார்.
2010, 2015ம் ஆண்டு காலத்துடன் ஒப்பிடுகையில் அப்போது அச்சிடப்பட்ட பணத்திற்கு பல மடங்கு பணம் தற்போது அச்சிடப்பட்டுள்ளதாக ரணில் தெரிவித்துள்ளார்.
நாம் பொருளாதாரத்தை சரிசெய்து முன்னோக்கி சென்றோம். ஆனால் எம்மீது குற்றம் சுமத்தினர். தற்போது பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த வருட இறுதியில் அதன் விளைவுகள் தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இளையவர்கள் எதிர்பார்ப்புடன் இந்த அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் வாக்களித்தனர். இன்று என்ன நடந்துள்ளது.? அந்த இளைஞர்கள் வெறுப்படைந்துள்ளனர். அவர்களின் எதிர்காலம் கேள்விக்குரியாகியுள்ளது என ரணில் விக்ரமசிங்க கூறினார்.
பொரளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.