வெஸ்ட்இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இலங்கை கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நேற்று அதிகாலை நடந்தது.
‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. 9.3 ஓவர்களில் அந்த அணி 46 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. குணதிலகா 9 ரன்னிலும், டிக்வெல்லா 4 ரன்னிலும், பதும் நிசங்கா 5 ரன்னிலும், பொறுப்பு கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் 11 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
5-வது விக்கெட்டுக்கு ஆஷென் பந்தரா, தினேஷ் சண்டிமாலுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணி அணியை சரிவில் இருந்து மீட்டனர். 20 ஓவர்களில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. தினேஷ் சண்டிமால் 46 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 54 ரன்னும், ஆஷென் பந்தரா 35 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 44 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர். வெஸ்ட்இண்டீஸ் அணி தரப்பில் பாபியன் ஆலென், கெவின் சின்கிளைர், ஜாசன் ஹோல்டர், ஒபெட் மெக்கா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.
பின்னர் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தாலும், அந்த அணியின் வீரர்கள் அடித்து ஆடினார்கள். சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயாவின் ஒரு ஓவரில் பாபியன் ஆலென் 3 சிக்சர்கள் பறக்கவிட்டு அணி வெற்றி இலக்கை எட்ட வைத்தார்.
19 ஓவர்களில் வெஸ்ட்இண்டீஸ் அணி 7 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜாசன் ஹோல்டர் 14 ரன்னும் (23 பந்து, ஒரு சிக்சர்), பாபியன் ஆலென் 21 ரன்னும் (6 பந்து, 3 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். சிமோன்ஸ் 26 ரன்னிலும், இவின் லீவிஸ் 21 ரன்னிலும், கிறிஸ் கெய்ல் 13 ரன்னிலும் கேப்டன் பொல்லார்ட் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர்.
இலங்கை அணி தரப்பில் லக்ஷன் சண்டகன் 3 விக்கெட்டும், டி சில்வா, சமீரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 13 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தியதுடன் அதிரடியாக 21 ரன்கள் திரட்டியும் ஆல்-ரவுண்டராக ஜொலித்த வெஸ்ட்இண்டீஸ் வீரர் பாபியன் ஆலென் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட்இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதலாவது ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் 4 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இலங்கை 43 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது.
இதனை அடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது ஆட்டம் ஆன்டிகுவாவில் நாளை இரவு 7 மணிக்கு நடக்கிறது.