பிரதமரின் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி.
நல்லிணக்கம், புரிந்துணர்வு மூலம் ஐக்கியத்தை வலுப்படுத்துவோம் பிரதமர் மஹிந்த சிவராத்திரி தினச் செய்தி
மகா சிவராத்திரி எனும் புனிதமான விரதத்தை அனுஷ்டிக்கும் உலகெங்கிலுமுள்ள இந்துக்களுடன் இணைந்து பக்தி மயமான இச் சுப நன்னாளைப் போற்றி அனுஷ்டிக்கும் இலங்கை வாழ் இந்துக்களுக்கு இந்த வாழ்த்துச் செய்தியைக் கூறிக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற ஏனைய சமூகங்களோடு ஐக்கியத்துடனும் நட்புறவுடனும் வாழும் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட எம் இந்துக்கள், இப்புனிதமான விரதத்தை ஆன்மிக உணர்வுடன் அனுஷ்டித்து வருகின்றனர்.
நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வினூடாக ஐக்கியத்திற்கான அவர்களது தேடலில் மேலும் பலம்பெற இறையருள் துணைபுரியட்டும். மகா சிவராத்திரி விரதத்தினை அனுஷ்டிப்பதால் ஆன்மிக விமோசனம் கிடைக்கும் என்பது இந்துக்களின் உயர்வான நம்பிக்கையாகும். தியானமே மனிதனை ஆன்மிக ரீதியிற் பக்குவப்படுத்தவல்லது என்றும் இருள் நீங்கி அறிவுஞானம் தளைத்தோங்க வேண்டும் என்ற பிரார்த்தனையோடும் மகா சிவராத்திரி தினத்தில் இந்து இறை அடியார்கள் அனைவரும் இரவு முழுவதும் கண்விழித்து விரதமிருந்து புண்ணிய கருமங்களில் ஈடுபட்டு இந்த மகோன்னத விரதத்தை அனுட்டிப்பதன் ஊடாகத் தமது ஆன்மிக வாழ்வினை வளப்படுத்துகின்றனர்.
இந்நன்னாளில் இறையருளால் நிச்சயம் ஆன்மிக பலம் பெறுவார்கள். மகா சிவராத்திரி தினத்தில் வளமானதொரு எதிர்காலத்திற்கான தமது எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேற இலங்கை வாழ் இந்துக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.