உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்: சர்வதேச குழுவை இலங்கைக்கு அழைத்து விசாரிக்க வேண்டும்!
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்:
சர்வதேச குழுவை இலங்கைக்கு
அழைத்து விசாரிக்க வேண்டும்! சஜித் அணி வலியுறுத்து
சர்வதேச சுயாதீன விசாரணைக் குழுவொன்றை இலங்கைக்கு அழைத்துவந்து, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார வலியுறுத்தினார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணி என்ன, பிரதான சூத்திரதாரி யார் என்பது தொடர்பில் அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கு தவறியவர்கள் தொடர்பிலேயே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சஹ்ரானைக் கைது செய்வதற்கு ரி.ஐ.டியின் பிரதிப் பொலிஸ்மா அதிபராக இருந்த நாலக சில்வா தயாரானார். அப்போது அவருக்கு எதிராக திடீரென குற்றச்சாட்டு வந்தது. அவர் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் ஷானி அபேசேகரவும் முடக்கப்பட்டார். எனவே, இதன் பின்னணியில் ஏதோ மர்மம் உள்ளது. விசாரணையை மறைப்பதற்கு முயற்சிக்கப்படுகின்றது. சாரா எங்கே? அவரை உடன் நாட்டுக்குக் கொண்டுவரவேண்டும்.
ஐ.எஸ். அமைப்புக்கு 2015 இல் ஒருவரே சென்றிருந்தார். சம்பவத்தின் பின்னணியில் ஐ.எஸ். அமைப்பு இருக்காது. இந்தியாவில் இருந்து ஒருவர் இயக்கி இருக்கக்கூடும் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் உள்ளது.
ஹக்கீம், ரிஷாத்தை விமர்சிப்பவர்கள், அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக அவர்களின் கட்சி உறுப்பினர்களின் வாக்குகளைப் பெறுகின்றனர். இதன்மூலம் அரசின் இரட்டை நிலைப்பாடு அம்பலமாகின்றது.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை வைத்து இந்த அரசே நன்மை அடைந்தது. தாக்குதலுக்கு அவர்களும் பொறுப்புக்கூற வேண்டும் . உண்மையை மூடிமறைப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது. எனவே, சுயாதீன சர்வதேச குழுவை அழைத்துவந்து இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோருகின்றோம்” – என்றார்.