தமிழ் நாட்டில் மதத்தைப் பரப்ப தமிழைப் படிக்க வேண்டுமே..? : ஜான்
சிவராத்திரியில் சிவன் நினைவுகள்…
“திருவாசகத்துக்கு உருகாதார்
ஒரு வாசகத்துக்கும் உருகார்”
என்று சின்ன வயதில் படித்திருக்கிறேன்.
‘ஆமாம் ஜான்.
நானும் படித்திருக்கிறேன்’ என்றார் என் நண்பர்.
எதுகை மோனைக்காக
எவரோ ஒருவர்
எப்போதோ சொன்ன சாதாரண வாக்கியம் என்று அதைப் பெரிதாக எண்ணாமல் விட்டு விட்டோம்.
ஆனால் சமீபத்தில் நாங்கள் அறிந்த ஒரு தகவல், எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது..!
“என்னை கல்லறையில் வைக்கும்போது, திருவாசகத்தையும் என்னோடு சேர்த்து வையுங்கள்.”
இப்படிச் சொன்னது
ஒரு இந்து மதத் துறவி அல்ல.!
கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக இங்கிலாந்திலிருந்து 1839 இல் தமிழ் நாட்டிற்கு வந்த ஒரு அறிஞர்… ஜி.யு.போப்.
தமிழ் நாட்டில் மதத்தைப் பரப்புவது என்றால்
தமிழைப் படிக்க வேண்டுமே..?
வேறு வழியின்றி தமிழ் படிக்க ஆரம்பித்தார்.
ஆனால் படிக்க படிக்க தமிழ் அவருக்கு பிடித்துப் போயிற்று !
திருக்குறள், நாலடியார், திருவாசகம் …
எல்லாவற்றையுமே தேடித் தேடி படித்தார் !
இவற்றையெல்லாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகமே அறியச் செய்ய ஆவல் கொண்டார்; அதன்படியே செய்து அளவில்லாத ஆனந்தம் அடைந்தார்.
கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கிறேன்…
மதம் மாற்ற தமிழ் நாட்டுக்கு வந்த மனிதர்,
மனம் மாறி இங்கிலாந்து சென்றார்.
40 ஆண்டு காலம் தமிழுக்கு சேவை செய்த ஜி.யு.போப், முதுமையில் உடல் தளர்ந்ததால் 1882 ல் இங்கிலாந்து திரும்பி விட்டாராம்.
ஆனாலும் அவர் மனமெல்லாம் திருவாசகம்தான் நிறைந்திருந்ததாம் !
தனது முதுமைக் காலத்தில் , தனது நெருங்கிய நண்பரிடம் மூன்று விருப்பங்களைத் தெரிவித்தாராம் :
“தான் இறந்த பின் தனது கல்லறையில் ‘இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்’ என்ற வாசகம் இடம்பெற வேண்டும்.
தமது கல்லறைக்குச் செலவிடும் தொகையில் ஒரு சிறுபகுதியாவது தமிழ் மக்களின் நன்கொடையால் அமைய வேண்டும்.
கல்லறையில் தம்மை அடக்கம் செய்யும் போது
தான் மொழிபெயர்த்து வெளியிட்ட திருக்குறள் மற்றும் திருவாசத்தையும் உடன் வைக்க வேண்டும் !”
அவருடைய விருப்பப்படியே இங்கிலாந்து ஆக்ஸ்போர்டில் வால்டன் தெரு என்ற வீதியில் உள்ள கல்லறைத்தோட்டத்தில் ஒரு மரத்தடியில் சலவைக்கல்லால் ஆன போப் கல்லறை அமைக்கப்பட்டு உள்ளது.
அதில் பொறிக்கப்பட்டு உள்ள ஆங்கில வாசகத்தின் தமிழாக்கம் :
‘தென்னிந்தியாவை சேர்ந்த ஜார்ஜ் உக்ளோ போப் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளை போதிக்கும் பேராசிரியராக பணியாற்றினார். மொழிக்காகவும், சமயப்பணிக்காகவும் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட போப் மீது பற்றுதல் கொண்ட தென்னிந்தியாவை சேர்ந்த அவருடைய தமிழ் அன்பர்களும், அவருடைய குடும்பத்தினரும் சேர்ந்து அமைத்த கல்லறை இது.’
இவ்வாறு அமைந்திருக்கிறது அந்த வாசகம்.
ஒரு இங்கிலாந்து கிறிஸ்துவர் இறக்கும் வேளையில் திருவாசகத்தை நினைத்து உருகி இருக்கிறார்..!
திருவாசகத்தின் பெருமைக்கு இதை விட வேறென்ன சான்று வேண்டும்?
திருவாசகத்தின் வரிகள் நெஞ்சுக்குள் ஒலிக்கின்றன :
“நமச்சிவாய வாழ்க
நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில்
நீங்காதான் தாள் வாழ்க…”