மியான்மரில் ஆட்சியை கவிழ்த்த ராணுவ தளபதியின் 2 குடும்ப உறுப்பினர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை.
மியான்மரில் நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அந்த நாட்டின் நாடாளுமன்றம் கடந்த 1-ந்தேதி கூடவிருந்த நிலையில் ராணுவம் அதிரடியாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து மியான்மர் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் அங்கு ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டதை அந்த நாட்டின் ராணுவ தளபதி மின் ஆங் ஹலேங் நியாயப்படுத்தினார். ஆனால் இதை வல்லரசு நாடான அமெரிக்கா கடுமையாக கண்டித்தது. அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
இந்த நிலையில் மியான்மரில் ஆட்சியை கவிழ்த்த ராணுவ தளபதியின் 2 குடும்ப உறுப்பினர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.
மியான்மர் இராணுவத்தின் ஐந்து வார கால சதி மற்றும் எதிர்ப்பாளர்கள் மீது அது நடந்துகொண்டிருக்கும் கொடூரமான ஒடுக்குமுறைக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்க இந்த பொருளாதார தடை விதித்துள்ளது.
கருவூலத் திணைக்களத்தால் அமைக்கப்பட்ட புதிய நடவடிக்கைகள், இராணுவ ஜெனரல் மின் ஆங் ஹேலிங்கின், வாரிசுகள் நடத்தி வரும் ஆறு வணிகங்களை குறிவைக்கின்றன.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்ட அறிக்கையில், “நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அரசியல் தலைவர்களையும் சட்டமியற்றுபவர்களையும் குறிவைத்து இராணுவத்தை கையகப்படுத்தும் தலைவர்கள், “வன்முறையை நாடுவதாலும், ஜனநாயகம் மீதான அதன் நெரிசலை இறுக்குவதாலும் ஆட்சியில் இருந்து தொடர்ந்து நன்மைகளைப் பெற முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.