இன்று மாசி அமாவாசை. பெண்கள் ஒரு சொம்பு தண்ணீரை வீட்டில் இப்படி வைத்தால் போதும்.
அமாவாசை தினத்தில் பெண்கள் 1 சொம்பு தண்ணீரை வீட்டில் இப்படி வைத்தால் போதும். முன்னோர்களுக்கு இருக்கும் எப்பேர்பட்ட கோபமும் தணிந்து, அவர்களுடைய ஆசீர்வாதத்தை பெற்று விடலாம்.
நம்முடைய வீட்டில் கஷ்டங்கள் வருவதற்கு முன்னோர்களுடைய கோபமும் ஒரு காரணம் தான். முன்னோர்களுடைய கோபம் என்றால், அவர்கள் மனம் வருந்தி என்றைக்குமே நம்மை திட்டி சாபம் கொடுக்க மாட்டார்கள். ஆனால் நம்மை மறந்து விட்டார்களே என்று அவர்களுடைய மனதில் சிறியதாக ஒரு ஏக்கம் இருந்தால் கூட, அந்த ஏக்கம் நமக்கு சாபமாக மாறி விடும். அது நம்மை மட்டுமல்லாமல் நமக்கு அடுத்து வரக்கூடிய, அடுத்த தலைமுறைகளையும் பாதிக்கும் அளவிற்கு இந்த சாபம் பொல்லாதது என்பது நம்முடைய முன்னோர்களின் கூற்று.
முன்னோர்களுக்கு நாம் செய்யும் கடமையை தவறாமல் செய்து வர வேண்டும். இதற்காகத்தான் அமாவாசை வழிபாடு, அவர்கள் இறந்த திதி அன்று தர்ப்பணம் கொடுக்கும் வழிபாடு என்று முறையாக பின்பற்ற வேண்டும். ஆனால் நம்முடைய சாஸ்திரத்தில் தான் எப்போதுமே ஆண்களுக்கு என்று ஒரு தனி கட்டுப்பாடு, பெண்களுக்கு என்று ஒரு தனி கட்டுப்பாடு இருக்கின்றதே! ஆணும் பெண்ணும் சமம் என்று எவ்வளவுதான் பேசினாலும், சில சாஸ்திர சம்பிரதாயங்களை இந்த சமுதாயம் ஒத்துக் கொள்வதே கிடையாது. பெண்களுக்கு என்று ஒரு தனி கட்டுப்பாடும், விதிமுறைகளும் இருக்கத்தான் செய்கின்றது. இதைப் பெண்கள் மீறுவதும் தர்மம் இல்லை.
பெண்கள் திருமணமாகி வந்த பின்பு, பிறந்த வீட்டில் இருக்கும் முன்னோர்களை, அதாவது அந்தப் பெண்ணினுடைய அம்மா அப்பா தாத்தா பாட்டி, என்று அவர்களுடைய முன்னோர்கள், இறந்தவர்களை நினைத்து புகுந்த வீட்டில் வழிபாடு செய்ய முடியாது. இதற்கு நம்முடைய சாஸ்திரமும் இடம் கொடுக்கவில்லை.
அதாவது மனதார நினைத்து அவர்களை வழிபாடு செய்வதில் தவறு ஒன்றும் கிடையாது. இருப்பினும் பெண்களின் தாய்வழி பக்கத்திலுள்ள முன்னோர்களை, முறையாக வழிபாடு செய்ய முடியாது. இதுதான் நியதி. இருப்பினும் தன்னுடைய பேத்தி தன்னுடைய மகள் என்று பெண் வீட்டு பக்கத்தில் உயிரிழந்த முன்னோர்களின் மனதிலும் நிச்சயமாக ஆசை இருக்கத்தான் செய்யும். அவர்களைத் திருப்திப்படுத்த அவர்களை அமைதிப்படுத்த, பெண்கள் தன்னுடைய தாய் வீட்டு முன்னோர்களுக்காக அமாவாசை தினத்தில் தங்களுடைய புகுந்த வீட்டில் என்னதான் செய்வது?
அமாவாசை தினத்தில் வீட்டிற்கு வெளியே தென்மேற்கு மூலையில் ஒரு சிறிய சொம்பில் தண்ணீரை வைத்து விடுங்கள். பெண்கள் தங்களுடைய தாய் வீட்டு முன்னோர்களை நினைத்து இந்த சொம்பு தண்ணீரை வைக்க வேண்டும்.
நீங்கள் அவர்களை நினைத்து வைக்கும் இந்த ஒரு சொம்பு தண்ணீரே போதும். அவர்களது மனதை குளிர வைத்து விடும். திருமணமான பெண்ணின் பிறந்த வீட்டுப் பக்கத்தில் இருக்கும் இறந்தவர்களின் ஆத்மாவானது, புகுந்த வீட்டில் வசிக்கும் பெண்ணினுடைய வீட்டிற்குள் நுழையவே முடியாது. காரணம் கணவன் வீட்டில் வாழ்ந்த முன்னோர்களின் ஆத்மா, மற்ற ஆத்மாக்களை தங்களுடைய வீட்டிற்குள் நுழைய அனுமதி கொடுக்காதாம்.
இதனால் தான் அந்த சொம்பு தண்ணீரை புகுந்த வீட்டில் வாழும் பெண் தன்னுடைய வீட்டிற்கு வெளியே வைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இதேபோல் நம்முடைய வீட்டில் நாம் இரவு தூங்கும் போது, நம்முடைய குலதெய்வமும் நம்முடைய முன்னோர்களும் நம்மை காண வருவார்கள் என்பது ஐதீகம். தினமும் சமையலறையில் ஒரு சொம்பு தண்ணீரை, மூடி போடாமல் திறந்தபடியே பெண்கள் தங்களுடைய கையால் வைத்து விட வேண்டும். இந்தத் தண்ணீர் உங்களைக் காண வரும் முன்னோர்கள், உங்கள் வீட்டு முன்னோர்கள், அதாவது பெண்களுக்கு திருமணம் ஆன பின்பு, கணவரின் வீட்டு முன்னோர்கள் தான், அந்தப் பெண்ணின் முன்னோர்களாக கருதப்படுகிறார்கள்.
அவர்கள் உங்களுடைய வீட்டிற்கு வரும்போது மனம் மகிழ்ந்து அந்த தண்ணீரை பருகி, உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசிர்வாதம் செய்வார்கள் என்றும் சாஸ்திரம் சொல்கிறது. உங்களுடைய வீட்டின் நன்மைக்காக இந்த இரண்டு பரிகாரங்களை நீங்கள் செய்து வருவதன் மூலம் முன்னோர்களின் கோபம் சாபம் என்று ஏதாவது கண்ணுக்குத் தெரியாமல் இருந்தாலும் அது மறைந்துவிடும் என்ற நம்பிக்கை.