இலங்கையின் தேசியக்கொடி அவமதிப்பு விளம்பரம் குறித்து சீனத் தூதரகம் பதில்.
“தேசியக் கொடி என்பது ஒரு நாட்டின் அடையாளமாகும். இது முழுமையாக மதிக்கப்பட வேண்டும்.”
இவ்வாறு கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் தேசியக் கொடியின் உருவம் பதியப்பட்ட கால் துடைப்பான் மற்றும் பாதணிகளை உலகளாவிய வர்த்தக நிறுவனமொன்று தனது இணையதளத்தில் விளம்பரப்படுத்தியமையால் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்தே சீனா இவ்வாறு தெரிவித்துள்ளது.
சீனாவைத் தளமாகக் கொண்ட நிறுவனம் ஒன்றால் குறித்த இணையத்தளத்தில் இந்தப் பொருட்கள் விளம்பரப்படுத்தப்பட்டன என்று தகவல் வெளியாகியது.
இதையடுத்து குறித்த சீன நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி ஜயனாத் கொலம்பகே சீனத் தூதரகத்துக்கு அறிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சீனத் தூதரகம், இலங்கை தேசியக் கொடியைப் பொருத்தமற்ற முறையில் விளம்பரப்படுத்தப்பட்டமை குறித்து தாம் கவலை அடைவதாகக் கூறியுள்ளது.
இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு நடிவடிக்கை எடுக்கும்படி சீன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.