சீனி மோசடியை விசாரிக்க சிறப்பு ஆணைக்குழு அவசியம்: கயந்த கருணாதிலக.
சீனிக்கான இறக்குமதி வரி சலுகை மூலம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் மற்றும் இதன் மூலம் இடம்பெற்றுள்ள பாரிய மோசடி தொடர்பில் ஆராய்வதற்கு விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், சீனிக்கான இறக்குமதி வரி குறைப்பின் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட 1,595 கோடி ரூபா நஷ்டத்தை மறைப்பதற்காக வெவ்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துள்ளனர். நிதி அமைச்சும் வர்த்தக அமைச்சும் ஒன்றின் மீது ஒன்று குற்றஞ்சுமத்திக் கொண்டிருக்கின்றன.
இலங்கையில் மாதத்திற்கு சீனி 50,000 தொன் மாத்திரமே இறக்குமதி செய்யப்படும். 2019 இல் மாதத்திற்கு 46,000 தொன் சீனி இறக்குமதி செய்யப்பட்டது. எனினும் சீனி இறக்குமதி வரி சலுகையினால் மோசடி இடம்பெற்ற காலத்தில் மாதமொன்றுக்கு 80,000 தொன் சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இறக்குமதி வரி சலுகை மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக மோசடிக்கான பாதை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளமை இதன் மூலம் தெளிவாகிறது.
50 ரூபாவிற்கு அறிவிடப்பட்ட வரி 25 சதமாக குறைக்கப்பட்டதன் ஊடாக பயன் பெற்றவர்கள் யார் ? எனவே இந்த பாரிய மோசடி தொடர்பில் ஆராய்வதற்கு விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். இந்த ஆணைக்குழுவிற்கு அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களை நியமிக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.