166 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இதை தொடர்ந்து இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.. இதில்நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணியின் கப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
இன்றைய ஆட்டத்தில் ஷிகர் தவான் மற்றும் அக்சர் பட்டேல் ஆகிய இருவருக்கும் பதிலாக நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் இருவரும் தங்கள் முதல் டி-20 போட்டியில் அறிமுகமாகினர். இதில் இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்று கப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு ஆரம்பத்திலேயே சோதனை காத்திருந்தது. இந்திய பவுலர் புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் 3வது பந்தில் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர்(0) எல்.பி.டபில்யூ. முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜாசன் ராய், டேவிட் மலானுடன் ஜோடி சேர்ந்தார்.
யுஸ்வேந்திர சாஹல் வீசிய 9வது ஓவரில் மலான்(24 ரன்கள்) எல்.பி.டபில்யூ. ஆனதில் இந்த ஜோடியும் பிரிந்தது. இதனை தொடர்ந்து வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சில் ஜாசன் ராய்(46 ரன்கள்), ஜானி பேர்ஸ்டோ(20 ரன்கள்) இருவரும் கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தனர்.
அடுத்து வந்த கப்டன் இயன் மார்கன் 28 ரன்களுடன் ஷர்துல் தாகூரின் பந்துவீச்சில் கேட்ச் ஆகி நடையை கட்டினார். மீண்டும் தாக்கூரின் பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ்(24 ரன்கள்) கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இந்தியாவின் தரப்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இறுதியாக இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜாசன் ராய் 46 ரன்கள் அடித்தார். சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான் இருவரும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனை தொடர்ந்து 165 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல்-இஷான் கிஷன் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே கே.எல்.ராகுல்(0) கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இதையடுத்து கப்டன் கோலியுடன், இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இவர்களது ஜோடி களத்தில் ரன் வேட்டை நடத்தியது.
இஷான் கிஷன் 32 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு, 56 ரன்கள் குவித்தார். இதன் மூலம் தனது முதல் டி-20 அரைசதத்தை இஷான் கிஷன் பதிவு செய்தார். மறுபுறம் விராட் கோலி(5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) 49 பந்துகளில் 73 ரன்கள் விளாசினார்.
அடில் ரஷீத் வீசிய 10வது ஓவரில் இஷான் கிஷன்(56 ரன்கள்) எல்.பி.டபில்யூ. முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் கோலியுடன் ஜோடி சேர்ந்து 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். 14 வது ஓவரில் இங்கிலாந்து பவுலர் ஜோர்டன் வீசிய பந்தில் ரிஷப் பண்ட்(26 ரன்கள்) கேட்ச் ஆகி வெளியேறினார்.
நிலைத்து நின்று ஆடிய விராட் கோலி 73 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில், இந்திய அணி 17.5 ஓவர்களில் 166 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.