ஈழத்தமிழர்களுக்கு ஐ.நா. மூலம் நிரந்தர நீதி கிடைக்க அழுத்தம்! அ.தி.மு.க. உறுதி.
ஈழத் தமிழர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் நிரந்தர நீதி கிடைக்கத் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப்படும் என்று அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 163 வாக்குறுதிகளை உள்ளடக்கிய அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலை உட்பட அநீதிகளுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது சர்வதேச நடுநிலை சுதந்திர தீர்ப்பாயம் மூலம் நடவடிக்கை எடுக்கும்படி அழுத்தம் கொடுக்கவுள்ளதாகவும் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வாழ் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை மற்றும் குடியிருப்பு அனுமதி வழங்குவதற்கு மத்திய அரசை வலியுறுத்தவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் மூலம் ஈழத் தமிழர்களின் உரிமைகள் கிடைத்திட மத்திய அரசின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைப்படுத்தப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய ஆணையிட வேண்டும் என்றும் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.