அம்பிகையின் உண்ணாவிரதத்துக்கு பிரிட்டிஷ் எம்.பி. ஆதரவு
இலங்கைத் தீவில் அனைவரது மனித உரிமைகளும் உறுதிசெய்யப்பட வேண்டும் என்று பிரிட்டன் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சேம் டெர்ரி தெரிவித்துள்ளார்.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி லண்டனில் 16 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் அம்பிகை செல்வகுமாருக்கு ஆதரவாக வீடியோவொன்றை வெளியிட்டு, அவர் இதனைக் கூறியுள்ளார்.
இலங்கை அரசால் மேற்கொள்ளப்படும் அநீதிகள் மற்றும் மனித உரிமை மீறல்களை மிக உயர்ந்த மட்டத்துக்குக் கொண்டு செல்லத் தாம் நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டனில் ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் தான் பெருமை அடைகின்றார் எனவும், இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அவர்கள் தன்னுடன் அடிக்கடி கதைக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பிகையின் உண்ணாவிரதம் கவனிக்கப்படாது வீண்போகவில்லை என்றும் பிரிட்டன் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சேம் டெர்ரி மேலும் தெரிவித்துள்ளார்.