பிரதிக் கல்விப் பணிப்பாளர் நியமனத்தில் முறைகேடு; அரசாங்க சேவை ஆணைக்குழுவிற்கு முறையீடு.
கிழக்கு மாகாணத்தில் இலங்கை கல்வி நிருவாக சேவையைச் சாராத ஒருவருக்கு முறைகேடாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் (முகாமைத்துவம்) பதவி வழங்கப்பட்டிருப்பதாக அரசாங்க சேவை ஆணைக்குழுவிற்கு முறையிடப்பட்டுள்ளது.
இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் இம்முறைப்பாட்டை செய்துள்ளது. சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் ஏ.எல்.முஹம்மட் முக்தார் அனுப்பி வைத்துள்ள முறைப்பாட்டுக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
இலங்கை கல்வி நிருவாக சேவையின் பிரமாணக் குறிப்பிற்கமைய பிரதிக்கல்விப் பணிப்பாளர் பதவியானது இலங்கை கல்வி நிருவாக சேவை இரண்டாம் வகுப்பு பொது ஆளணிக்குரிய பதவியாகும். இச்சேவையைச் சாராத ஒருவர் இப்பதவியை வகிக்க முடியாது. அது இலங்கை கல்வி நிருவாக சேவை பிரமாணக்குறிப்பை அப்பட்டமாக மீறும் செயற்பாடாகும்.
ஆனால் மூதூர் கல்வி வலயத்தைச் சேர்ந்த அதிபர் ஒருவருக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடான நியமனத்தை வழங்கிய அதிகாரிகள் தாபனக்கோவை ஏற்பாடுகளுக்கமைய தண்டிக்கப்பட வேண்டியவர்களாவர்.
ஒரு சேவையின் பிரமாணக் குறிப்பை மீறி நியமனமோ பதவி உயர்வோ வழங்க முடியாது. கிழக்கு மாகாணத்தில் எந்தவொரு கல்வி வலயத்திலும் இலங்கை கல்வி நிருவாக சேவை தரத்தைச் சாராத எவருக்கும் பிரதி கல்விப் பணிப்பாளர் பதவி வழங்கப்படவில்லை. தற்போது போதியளவு கல்வி நிர்வாக அதிகாரிகள் வலயக் கல்வி அலுவலகங்களில் கடமையாற்றி வருகின்றனர்.
சில வலயக் கல்வி அலுவலகங்களில் தேவைக்கு மேலதிகமாகவும் கல்வி நிருவாக அதிகா
ரிகள் கடமையாற்றி வருகின்றனர். இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் கோட்டக் கல்வி அதிகாரிகளாக கடமையாற்றுவதனை நாம் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் இலங்கை கல்வி நிருவாக சேவை பிரமாணக் குறிப்பின் அட்டவணைப்படுத்தப்பட்ட பதவியான பிரதிக் கல்வி பணிப்பாளர் பதவி இலங்கை கல்வி நிருவாக சேவையைச் சாராத ஒருவர் வகிப்பதை அனுமதிக்க முடியாது.
ஆகையினால் முறைகேடாக வழங்கப்பட்டிருக்கின்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் பதவி நியமனம் உடனடியாக இரத்து செய்யப்பட்டு, கல்வி நிர்வாக சேவை அதிகாரியைக் கொண்டு அவ்வெற்றிடம் வேண்டுமென அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
(அஸ்லம் எஸ்.மௌலானா)