மாகாண சபைகளுக்கான தேர்தல்: அரசின் இறுதி நிலைப்பாடு என்ன? ஜே.வி.பி. பகிரங்கக் கேள்வி.
மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் தனது உறுதியான இறுதியான நிலைப்பாடு என்னவென்பதை அரசு உடன் அறிவிக்க வேண்டும் என்று ஜே.வி.பி. வலியுறுத்தியுள்ளது.
ஜே.வி.பியின் ஊடகவியலாளர் மாநாடு கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“மாகாண சபைத் தேர்தல் எப்போது, எந்த முறைமையின் கீழ் நடத்தப்படும் என்பது தொடர்பில் அரசு இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. ஆனாலும், அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் அமுலாக வேண்டும் என ஜெனிவாவில் இந்தியா வலியுறுத்தியபோது, எதிர்வரும் ஜுன் மாதம் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்ற தகவலை அரசு வெளியிட்டிருந்தது. அதன்பின்னர் அந்த அறிவிப்பு மாயமானது. தற்போது மீண்டும் கருத்து வெளியிடப்பட்டு வருகின்றது.
எனவே, மாகாண சபைத் தேர்தல் எப்போது, எந்த முறைமையின் கீழ் நடத்தப்படும் என்பது தொடர்பான தனது உறுதியான – இறுதியான நிலைப்பாட்டை அரசு விரைவில் அறிவிக்க வேண்டும்” – என்றார்.