‘புர்கா’வைத் தடைசெய்வதால் பிரச்சினைகள் உச்சமடையும்! முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை.
இலங்கையில் புர்காவைத் தடை செய்வதால் தற்போது காணப்படும் பிரச்சினைகள் மேலும் தீவிரமடையுமே தவிர, அவை ஒருபோதும் தணியப் போவதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இலங்கையில் புர்கா விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளமை தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
“மக்களின் ஜனநாயக உரிமையைத் தடைசெய்வதற்கு அரசு முயற்சிக்கிறது. அதன் விளைவாகப் பிரச்சினைகள் தீரப் போவதில்லை. மாறாக பிரச்சினைகள் தீவிரமடையும்.
அரசின் தீர்மானங்கள் நாட்டிலுள்ள பிரச்சினைகளைக் குறைப்பதற்கு வழிசெய்யும் என்று எமக்குத் தோன்றவில்லை.
அதேவேளை, புர்கா என்பது மத ரீதியான தீவிரவாதப்போக்கின் அடையாளமாக இருக்கின்றது என அமைச்சர் சரத் வீரசேகர கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும், அது குறித்து சரத் வீரசேகர தீர்மானம் எடுக்க முடியாது. என்னுடைய பார்வையில் அவர்தான் தீவிரவாதப் போக்கில் செயற்படுவது போன்று தோன்றுகின்றது.
அத்துடன் அவர் விரும்பும் ஆடையையே நாட்டுமக்கள் அணியவேண்டும் என்ற அடிப்படையில் ஒவ்வொருவரும் தமது மத ரீதியான நம்பிக்கையின்படி அணியும் ஆடைகளைத் தடைசெய்வதே தீவிரவாதப் போக்குடைய சிந்தனையாகும்” – என்றார்.