இலங்கைக்கு நாம் எவ்வித அநீதியையும் இழைக்கவேமாட்டோம்! – இந்தியா
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு தாம் அநீதி இழைக்கப் போவதில்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை மீதான அதிகாரப்பற்றற்ற கலந்துரையாடலின்போதே, இந்தியா இதனைத் தெரிவித்துள்ளது.
“நாம் இலங்கைக்கு எவ்வித அநீதியையும் இழைக்க மாட்டோம்” என்று இந்தியப் பிரதிநிதி ஐ.நா. அதிகாரப்பற்றற்ற கலந்துரையாடலில் குறிப்பிட்டுள்ளார் என்று கொழும்பு ஊடகமொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேநேரம், இலங்கை அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
பிரிட்டன் தலைமையிலான நாடுகள் இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் முன்வைத்துள்ள பிரேரணைக்கு வாக்களிப்பது தொடர்பாக இந்தியா இதுவரையில் எந்தத் தகவலையும் வெளியிட்டிருக்கவில்லை. இந்நிலையிலேயே இந்தியப் பிரதிநிதி மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார்.
அவரின் கருத்துக்கமைய பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கமாட்டாது என்பது நிரூபணமாகியுள்ளது என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.