அனுமதியின்றிப் பறந்த ஹெலி வான் பொலீஸ் படை வழிமறிப்பு!
பாரிஸ் வான் பரப்பில் தென்பட்ட ஹெலிக்கொப்ரர் ஒன்றை வான் பொலீஸார் ‘மிராஜ்-2000’ போர் விமானம் ஒன்றின் உதவியுடன் வழிமறித்துத் தரையிறக்கினர்.
நேற்றுமாலை ஐந்து மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக விமான, விண்வெளிப் படைப்பிரிவு விடுத்துள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
அடையாளம் தெரியாத ஈசி130 (EC130) சிவிலியன் ஹெலிக்கொப்ரர் பாரிஸ் நகருக்கு வடமேற்கே 100 கிலோ மீற்றர்கள் தொலைவில் வானில் அவதானிக்கப்பட்டு இடைமறித்துத் தரையிறக்கப்பட்டது என்று அந்த செய்தி கூறுகிறது.
சிவிலியன் விமானப் போக்குவரத்து விதிமுறைகளை மீறிக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் வானொலித் தொடர்பை ஏற்படுத்தாமல் தேசிய வான்பரப்பினுள் பறந்த அந்தக் ஹெலியை வான் பொலீஸ் படையின் ஹெலிகள் ‘மிராஜ்’ போர் விமானம் ஒன்றின் உதவியோடு வழி மறித்தன. பின்னர் வானில் வைத்து நடத்தப்பட்ட பரிசோதனைக்குப் பிறகு அந்த ஹெலி அதன் தரை இலக்காகிய Issy-les-Moulineaux பகுதியில் வான் பொலீஸ் பாதுகாப்புடன் இறக்கப்பட்டது.
பிரான்ஸில் பதிவு செய்யப்பட்ட அந்த ஹெலி பிரிட்டனில் இருந்து வந்தது என்ற தகவல் பின்னர் தெரிய வந்தது.
இந்த சம்பவத்தின்போது போர் விமானமும் பொலீஸ் ஹெலிகளும் திடீரென வானில் தென்பட்டதைக் கண்ட பலர் அந்தக் காட்சிகளை சமூகவலைத் தளங்களில் பகிர்ந்தனர்.
வழமையாக இது போன்று சந்தேகத் துக்குரிய விமானங்களை வழிமறிக்கும் சந்தர்ப்பங்களில் மிகை ஒலிப் போர் விமானங்கள் அவற்றின் வேக, ஒலி எல்லை மீறிக் குடியிருப்புப் பகுதிகள் மீது தாழப்பறக்க அனுமதிக்கப்படுவதால் அவற்றின் பேரொலி நகர மக்களைக் கலவரப்படுத்துவது வழக்கம். இந்த தடவை அது தவிர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.