ரிஷாத், அஸாத் ஸாலி, ஹிஸ்புல்லா, முஜிபுர் ‘ஈஸ்டர் தாக்குதல்’ மறைமுக சூத்திரதாரிகள் : விஜயதாஸ
ரிஷாத், அஸாத் ஸாலி, ஹிஸ்புல்லா, முஜிபுர்
‘ஈஸ்டர் தாக்குதல்’ மறைமுக சூத்திரதாரிகள்
– விஜயதாஸ எம்.பி. குற்றச்சாட்டு
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கு முஸ்லிம் அரசியல் தலைவர்களான ரிஷாத் பதியுதீன், அஸாத் ஸாலி, ஹிஸ்புல்லாஹ் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் மறைமுகமாகத் துணைபோயுள்ளனர்.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச குற்றஞ்சாட்டினார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை மீதான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையிலேயே, விஜயதாஸ ஊடகங்களிடம் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நல்லாட்சி அரசு முஸ்லிம் வாக்குகளை இழந்துவிடும் என்ற ஒரே காரணத்துக்காகக் கடந்த அரசில் அங்கம் வகித்த 17 முஸ்லிம் உறுப்பினர்களின் ஆலோசனைகளுக்கு அமைய என்னை அமைச்சரவையில் இருந்து வெளியேற்ற அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்திருந்தார்.
நீதி அமைச்சில் இருந்து விஜயதாஸ ராஜபக்சவை விலக்காவிட்டால், தாம் அரசை விட்டு வெளியேறப் போகின்றோம் எனவும் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் ரணிலுக்கு அழுத்தம் கொடுத்திருந்தனர்.
அடிப்படைவாதிகளின் கோரிக்கைகளுக்குத் தலைசாய்த்து, தன்னை அரசில் இருந்து வெளியேற்ற அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்திருந்தார்” – என்றார்.